என்.செல்வராஜா. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2023. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
xii, 120 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-624-6164-45-4.
2008ஆம் ஆண்டு ‘செ.கணேசலிங்கனின் படைப்புலகம்’ என்ற பெயரில் ஒரு நூல் பேராசிரியர் கா.சிவத்தம்பி, கலாநிதி செ.யோகராசா, லறீனா ஏ.ஹக் ஆகியோரின் ஆக்கங்களுடன் வெளிவந்திருந்தது. அதில் செ.கணேசலிங்கன் அவர்கள் எழுதியிருந்த 79 நூல்கள் பற்றிய குறிப்புரையுடனான நூல்விபரப் பட்டியலொன்றை நான் தொகுத்து வழங்கியிருந்தேன். இன்று அமரர் செ.கணேசலிங்கன் எம்மிடையே இல்லை. தனது நூல் வெளியீட்டை அவர் 2019இல் நிறுத்திவிட்டிருந்தார். ‘செ.கணேசலிங்கனின் எழுத்துலகம்’ என்ற இந்நூலில் அமரர் செ.கணேசலிங்கன் எழுதிய 112 நூல்களைப் பற்றிய விபரப்பட்டியலும், அமரர் செ.கணேசலிங்கன் தொடர்பாக வெளிவந்த சில நூல்கள் பற்றியதான விபரப்பட்டியலும் இடம்பெற்றுள்ளன. இந்நூலில் ‘செ.கணேசலிங்கனின் படைப்புலகம்’ என்பதே பிரதான பதிவாகும். இதில் நூலின் மேலட்டைப் படத்துடன், நூலியல் பதிவுகள் இடம்பெற்றுள்ளன. நூலியல் பதிவுகளாக, நூலின் தலைப்பு, வெளியீட்டாளர் முகவரி, நூலின் பதிப்பு விபரம், அச்சக விபரம் என்பனவும், அதனைத் தொடர்ந்து நூலின் பௌதிக அம்சங்களான பக்க எண்ணிக்கை, விலை, நூலின் அளவு (சென்ரி மீற்றரில்) என்பனவும், சில பதிவுகளில் சர்வதேச தராதர நூல் எண் விபரமும் தரப்பட்டுள்ளன. நூல் பற்றிய சிறு குறிப்பொன்றும் தனிப் பந்தியாக பதிவின் இறுதியில் இடம்பெற்றுள்ளது. பிரதான பதிவு முதற் பதிப்பு வெளியிடப்பெற்ற ஆண்டொழுங்கில் தரப்பட்டுள்ளது. பின்னைய பதிப்புகள் வெளியிடப்பட்டிருந்தாலும் அப்பதிவுகள் மூல நூலின் ஆண்டு ஒழுங்கிலேயே இடம்பெற்றுள்ளமை கவனத்திற்குரியது. மீள் பதிப்புகளுக்கெனத் தனியான தொடர் இலக்கம் வழங்கப்படவில்லை. இது போலவே மொழிபெயர்ப்புச் செய்யப்பட்ட செ.கணேசலிங்கன் அவர்களின் சிங்கள மற்றும் ஆங்கில நூல்களுக்கும் தொடர் இலக்கம் வழங்கப்படவில்லை. பின்னாளில் செ.கணேசலிங்கன் அவர்கள் எழுதிய சில நாவல்கள் சேர்க்கப்பட்டு தனிநூல்களாகத் தொகுக்கப்பட்டு, அந்நூலுக்குப் புதிய தலைப்பும் வழங்கப்பட்டு தனித்தனித் தொகுப்பு நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன. அவை ஏற்கெனவே மூல நூல் வெளிவந்த ஆண்டுவாரியாகப் பிரதான பதிவுப் பகுதியில் பதியப் பெற்றுள்ளதால், அவற்றிற்கும் தொடர் இலக்கம் வழங்கப்படவில்லை. 112 பிரதான பதிவுகளினதும் தொடர்ச்சியாக இடம்பெற்றிருப்பது ‘அமரர் செ.கணேசலிங்கன்; தொடர்பாக வெளிவந்த சில நூல்கள்’ என்ற பதிவாகும். பிரதான பதிவுகளைத் தொடர்ந்து நூல் தலைப்புச் சுட்டி இடம்பெறுகின்றது. ஒவ்வொரு தலைப்பினை ஒட்டியும் அந்த நூலுக்குரிய பிரதான பதிவிலக்கம் தரப்பட்டுள்ளது.