என்.செல்வராஜா. பிரித்தானியா: அயோத்தி நூலக சேவைகள்-பிரித்தானிய கிளை, இணை வெளியீடு, கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2023. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
xliv, 244 பக்கம், விலை: ரூபா 1750., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-6164-48-5.
புதிதாகக் கட்டப்பட்டு வரும் மட்டக்களப்பு பொதுசன நூலகம் எவ்வாறு நவீன நூலக சிந்தனையோடு இயைந்து வளர வேண்டும் என்பது பற்றி மிகத் தெளிவாகவும் அழகாகவும் சுவையாகவும் இந்நூல் கூறுகின்றது. ‘அரங்கம்’ பத்திரிகையில் 2021ஆம் ஆண்டில் தொடராக எழுதப்பட்ட ஒரு பெரும் கட்டுரை, நூல் வடிவில் செம்மையாக்கப்பட்டு இங்கு அளிக்கப்படுகின்றது. ‘மட்டக்களப்பில் பொலிவுபெறும் பொதுசன நூலகம்’ என்னும் தலைப்பில் ஆரம்பித்து ‘சிறப்புச் சேர்க்கையில் இடம்பெறவேண்டிய மட்டக்களப்பு மண்வாசனை கொண்ட புனைவு இலக்கியங்கள், கூத்துகள்’ எனும் தலைப்பு வரை மொத்தமாக 20 பெரும் தலைப்புகளை இந்நூல் தாங்கியுள்ளது. இத்தலைப்புகள் அனைத்தையும் நாம் பின்வரும் நான்கு பிரதான பிரிவுகளுக்குள் அடக்கலாம். ஒன்று- மட்டக்களப்பு நூலகம் பற்றிய பழைய வரலாறும் அதன் தன்மையும், இரண்டு- புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் நூலகம் என்னென்ன அம்சங்களை கொண்டிருக்க வேண்டும், மூன்று-அதில் தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டிய பிரதான நூலகப் பிரிவுகள் பற்றிய குறிப்புரைகள், நான்கு-இந்நூலகம் கிழக்குப் பிராந்திய தலைமை நூலகமாக எவ்வாறு கட்டியெழுப்பப்படவேண்டும். மட்டக்களப்பு பொதுசன நூலகத்தின் வரலாற்றை பல்வேறு அறிஞர்களின் அனுபவ வாயிலாக எமக்குணர்த்தி மட்டக்களப்பு பொதுநூலகத்தின் வரலாறுகூறும் முதலாவது நூலாகவும் ஆசிரியர் இதனை உருவாக்கியிருக்கிறார்.