17022 தமிழ் உலகு (மலர் 1, இதழ் 1, ஐப்பசி 2003).

அம்மன்கிளி முருகதாஸ் (மலராசிரியர்). கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச்சங்கம், இல. 7, 57வது ஒழுங்கை ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஐப்பசி 2003. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201, டாம் வீதி).

142 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ., ISSN: 1391-8737.

கிழக்கிலங்கைப் பல்கலைக்கழக விரிவுரையாளராகவிருந்த திருமதி அம்மன்கிளி முருகதாஸ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு, ஈழத்துத் தமிழ்ப் புலமையை மையமாகக் கொண்டு தமிழ் கூறும் நல்லுலகின் புலமைப் பேறுகளை ஒருங்கிணைக்கும் ஆய்விதழாக

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தினரால் அரையாண்டிதழாக வெளியிடப்பெற்ற ஆய்விதழின் முதலாவது இதழ் இதுவாகும். இவ்விதழ் பல்வேறு காரணங்களினால் தொடர்ந்து வெளிவரவில்லை. தமிழ் உலகு ஆலோசனைக் குழுவில் கார்த்திகேசு சிவத்தம்பி, சுவாமிநாதன் சுசீந்திரராஜா, சின்னத்தம்பி தில்லைநாதன், அருணாசலம் சண்முகதாஸ், சிவசுப்பிரமணியம் பத்மநாதன் ஆகிய பேராதனைப் பல்கலைக் கழகத்தினதும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தினதும் அறிவுஜீவிகள் பணியாற்றியிருந்தனர். இவ்விதழில் திருகோணமலை தி.த.சரவணமுத்துப் பிள்ளை (செ.யோகராசா), புராணங்களில் நவீன கருத்துக்களைக் கூறும் முன்னோடி முயற்சிகள்- கி.பி. 19ம் நூற்றாண்டில் ஈழத்தில் எழுந்த புராணங்கள் குறித்த சிறப்பு நோக்கு (றூபி வலன்ரீனா பிரான்சிஸ்), பெண் எழுத்தாளர்களின் புனைவு இலக்கியங்களில் பெண் நிலை நோக்கு: கவிதை பற்றிய சிறப்பு நோக்கு (அம்மன்கிளி முருகதாஸ்), தமிழ்மொழி வரலாறும் தெ.பொ.மீனாட்சிசுந்தரனாரும் (கி.அரங்கன், எம்.சுசீலா), இலங்கைப் பிராமிக் கல்வெட்டுகளில் மருமகளைக் குறிக்கும் உறவுப் பெயர்கள் – கல்வெட்டு மொழி பற்றிய ஒரு பார்வை (ப.புஷ்பரட்ணம்), இலங்கையில் பல்லவ கலாசாரம் (சி.பத்மநாதன்), நவீன காலத்துக்கு முன்னர் தமிழரிடையே நிலவிய அறிவுமுறைமை பற்றிய சில குறிப்புகள் (கா.சிவத்தம்பி), தமிழக கலை வரலாற்று ஆய்வுகள் (கு.சேதுராமன்) ஆகிய எட்டு கட்டுரைகளும், எஸ் சிவலிங்கராஜா எழுதிய ‘பத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்துத் தமிழ்க் கல்வி’ என்ற நூலுக்கு சோ.சந்திரசேகரன் வழங்கிய மதிப்பீட்டாய்வும், டபிள்யூ எஸ்.கருணாதிலக்கவின் ‘தமிழ்-சிங்கள அகராதி’ (சு.சுசீந்திரராஜா), செ.யோகராஜா எழுதிய ‘தமிழில் சிறுவர் இலக்கியம்’ (வே.செவ்வேட்குமரன்), வீ.அரசு எழுதிய ‘தமிழியல் ஆய்வு-கருத்துநிலைத் தேடல்’  (செ.யொகராசா) ஆகிய நூல் மதிப்பீடுகளும், ‘யாழ்ப்பாணக் கட்டடக் கலை-சூழல் அமைவுபடுத்தல்: பணிகளும் அம்சங்களும்’ (தா.சனாதனன்), ‘ஈழத்து இதழியலின் வரலாறும் மதிப்பீடும்’ (செ.யோகராசா) ஆகிய ஆய்வரங்குகள் பற்றிய அறிக்கைகளும் இவ்வாய்விதழில் இடம்பெற்றிருக்கின்றன.

ஏனைய பதிவுகள்