பிரான்ஸ்: வென்மேரி அறக்கட்டளை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2023. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).
76 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ.
தமிழின் ஆற்றல்மிகு ஆளுமைகளை அங்கீகரித்து கௌரவித்து விருது வழங்கும் நோக்கில் ‘வென்மேரி அறக்கட்டளை’ 12.01.2022 அன்று யாழ்ப்பாணத்தில் நாவாந்துறையைச் சேர்ந்த வென்சிலாஸ்-மேரியம்மா தம்பதிகளின் நினைவாக உருவாக்கப்பட்டது. அதன் முதலாவது விருது வழங்கும் நிகழ்வு வென்மேரி அறக்கட்டளையினரால் 17.08.2022 இல் முதல் தடவையாக யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பெற்றது. அதன் தொடர்ச்சியாக 06.08.2023 அன்று இரண்டாவது தடவையாக பிரான்சில் அவ்விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. அதன்போது வெளியிடப்பெற்ற சிறப்பு மலர் இதுவாகும். அணு விஞ்ஞானி கலாநிதி வேலுப்பிள்ளை இலகுப்பிள்ளை, ஒலிம்பிக் வீரர் கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம், இலக்கிய ஆர்வலர் இரத்தின ஐயர் பத்மநாப ஐயர் ஆகியோருக்கு பேராளுமை விருதுகளும், பேராசிரியர் இளையதம்பி பாலசுந்தரம் (கனடா), எழுத்தாளர் லெட்சுமணன் முருகபூபதி (அவுஸ்திரேலியா), பேராசிரியர் சதாசிவம் சச்சிதானந்தம் (பிரான்ஸ்), எழுத்தாளர் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (பிரித்தானியா), நாவலாசிரியர் அண்ணாமலை பாலமனோகரன் (டென்மார்க்), பேராசிரியர் ஆசி கந்தராஜா (அவுஸ்திரேலியா), ஊடகவியலாளர் நாகமணி லோகேந்திரலிங்கம் (கனடா), நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் ரூபவதனா மகேஸ்வரன் (நோர்வே), நாடக இயக்குநர் கனகரத்தினம் பாலேந்திரா (பிரித்தானியா), நூலகவியலாளர் நடராஜா செல்வராஜா (பிரித்தானியா), பேராசிரியர் பாலசிங்கம் சுகுமார் (பிரித்தானியா), தேசிய உதைபந்தாட்ட வீரர் அந்தோனிப்பிள்ளை கொன்சிலஸ் (பிரான்ஸ்), கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் (இந்தியா), பரத சூடாமணி கௌசல்யா ஆனந்தராஜா (பிரான்ஸ்), மனிதநேய பண்பாளர் சுப்பிரமணியம் கதிர்காமநாதன் (சுவிட்சர்லாந்து), நாடகக் கலைஞர் தம்பையா ராஜகோபால் (பிரான்ஸ்), கலாநிதி மரீனா இல்யாஸ் ஷாபி (நியூசிலாந்து), சங்கீத கலா வித்தகர் விஜயலட்சுமி போஜராஜசர்மா (ஜெர்மனி), நூலகம் நிறுவனம் (இலங்கை) ஆகிய விருதுபெறுவோர்களின் பணிகள் தொடர்பான அறிமுகக் குறிப்பினை இம்மலர் பிரதானமாக உள்ளடக்குகின்றது.