க.சண்முகலிங்கம். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2024. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
110 பக்கம், விலை: ரூபா 650., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-6164-60-7.
இருபதாம் நூற்றாண்டில் இலங்கையில் ஏற்பட்ட சமூகப் பொருளாதார அரசியல் மாற்றங்கள் இலங்கையின் பௌத்த சமயப் பண்பாட்டிலும் பெருமாற்றங்களை ஏற்படுத்தின. இலங்கையின் பெரும்பாலான சிங்கள மக்களின் சமயமான பௌத்தம், சிங்களமயமாக்கலுக்கு உட்பட்டது. இதனால் அது தன் அடையாளத்தை சிங்கள பௌத்தம் என மாற்றிக்கொண்டது. மேற்கண்டவாறு மாற்றமுற்ற இலங்கையின் பௌத்தமானது, சமூகவியல், மானிடவியல் ஆய்வாளர்களால் ‘அரசியல் பௌத்தம்’ எனஅழைக்கப்பட்டது. இலங்கையில் அரசியல் பௌத்தம் என்ற தோற்றப்பாட்டினை ஆராய்ந்து ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியவர்களுள் கணநாத் ஒபயசேகரா முக்கியமானவர். இவர் ஐக்கிய அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் 20 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியவர். இவரது ஆக்கங்கள் ‘இலங்கையின் பௌத்த சமூகவியல்’ என்னும் சிறப்பு ஆய்வுத்துறையொன்றை உருவாக்கியுள்ளது. கணநாத் ஒபயசேகராவினாலும் அவரோடு ஒத்த கருத்துடையவர்களான ஆய்வாளர்களாலும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சில ஆய்வுகளை தமிழில் அறிமுகம் செய்யும் வகையில் க.சண்முகலிங்கம் எழுதிய ஒன்பது கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இக்கட்டுரைகள், (1) பௌத்த சமய சீர்திருத்த இயக்கமும் புரட்டஸ்தாந்திய பௌத்தத்தின் தோற்றமும், (2) பத்தினி தெய்வ வழிபாடும் சிங்கள பௌத்தப் பண்பாடும், (3) இலங்கையில் பௌத்தம்: தத்துவமும் நடைமுறையும், (4), துட்டகைமுனுவின் வீர வரலாறும் அதன் புராணவியல் முக்கியத்துவமும், (5) மகாவம்சமும் சிங்கள பௌத்த அடையாள உருவாக்கமும், (6) சிங்கள பௌத்த அடையாள வலியுறுத்தலும் அநகாரிக தர்மபாலவின் வரலாற்று வகிபாகமும், (7) கேர்ணல் ஒல்கொட்: தியோசொவிக்கல் இயக்கமும் பௌத்த நவீனத்துவமும், (8) கேர்ணல் ஒல்கொட்: புரட்டஸ்தாந்திய அற ஒழுக்கமும் பௌத்த சமயச் சீர்திருத்தமும், (9) கேர்ணல் ஒல்கொட்: பௌத்த வினா-விடையும் சமயத் தூய்மைவாதமும் ஆகிய தலைப்புகளில் இடம்பெற்றுள்ளன.