சிவ. தியாகராஜா. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2023. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
256 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 2000., அளவு: 24×17.5 சமீ., ISBN: 978-624-6164-21-8.
திரு. வி.தேவராஜ் ‘வீரகேசரி’ ஆசிரியராக இருந்த வேளையில் 01.02.2004 முதல் 01.05. 2005 வரையுள்ள காலத்தில்; ‘பௌத்தத்தை வளர்த்த பண்டைய தமிழர்கள்’ என்ற தலைப்பில் தொடராக வெளியிடப்பட்ட வரலாற்றுத் தொடரின் நூல் வடிவம் இது. இத்தொடர் மீளவும் 2006-2007 காலகட்டத்தில் அப்பத்திரிகையில் மீள்பிரசுரமாக வெளிவந்தமையும் குறிப்பிடத்தக்கது. கி.மு.300ஆம் ஆண்டிலிருந்து கி.பி.1200ஆம் ஆண்டுவரை ஏறக்குறைய ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுக்காலம் பௌத்த மதம் தமிழர்கள் பேணிய முக்கிய மதங்களில் ஒன்றாக விளங்கிவந்துள்ளது. பௌத்தத்தின் பெயரால் இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைத்த அட்டூழியங்களைத் தொடர்ந்து இன்றைய தமிழர்கள் பௌத்தத்தை ஒருவிதமான வெறுப்புணர்வுடன் பார்ப்பது தவிர்க்கமுடியாதுள்ளது. ஆனால், அச்செயல்கள் பௌத்த மதக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்பதையும், வரலாற்றுக் காலத்தில் தமிழ் மக்கள் பௌத்தத்திற்களித்த கொடையையும் பௌத்தம் தமிழர் நாகரீகத்திற்களித்த பங்கையும் எடுத்துக் காட்டுவதே இந்நூலின் நோக்கமாகும். ஆறு பகுதிகளாக வெளியிடப்பட்டுள்ள இந்நூலின் ‘பௌத்த சகாப்தம்’ என்ற முதலாம் பாகத்தில் கௌதம புத்தரின் காலம், புத்த பிரானின் வாழ்க்கை வரலாறு, பௌத்த மதத்தின் பயணம் ஆகிய மூன்று அத்தியாயங்கள் இடம்பெறுகின்றன. ‘தமிழகத்தில் பௌத்த மதம்’ என்ற இரண்டாம் பாகத்தில் தமிழகத்தில் பௌத்த மதம், தமிழகத்தில் சில பௌத்த திருத்தலங்கள், தமிழகத்தின் பௌத்த பெரியார்கள், தமிழ் பௌத்த ஞானிகள் இயற்றிய பாளி இலக்கியங்கள், தமிழ் இலக்கியங்களில் பௌத்தம் ஆகிய ஐந்து அத்தியாயங்களும், ‘பௌத்தம் பேணிய இலங்கைத் தமிழர்’ என்ற மூன்றாம் பாகத்தில் இலங்கையில் பௌத்த மதம், பௌத்தத்தைப் பேணிய இலங்கைத் தமிழ் அரசர்கள், திராவிடக் கலையமைப்பில் பௌத்த ஆலயங்கள், ஆகிய மூன்று அத்தியாயங்களும், ‘யாழ்ப்பாண பௌத்தம்’ என்ற நான்காம் பாகத்தில் நாகநாடு, மணிபல்லவம், புத்த விஜயம், யம்புகோளமும் சங்கமித்தை வருகையும், நாகநாட்டு வளங்களும் புராதன மதங்களும், கண்ணகியும் பௌத்தமும், மணிநாகபுரம் கந்தரோடை, வடகரை ஆஸ்தானம் வல்லிபுரம், வல்லிபுரப் பொற்சாசனம் 142, 148, 157, பௌத்தம் பரவிய ஏனைய இடங்கள், பெருநிலப்பரப்பின் பௌத்த தலங்கள், யாழ்ப்பாணத் தமிழ் பௌத்த பாரம்பரியம் ஆகிய 12 அத்தியாயங்களும், ‘தமிழர் போற்றிய பௌத்த தர்மம்’ என்ற ஐந்தாம் பாகத்தில் திரிபிடகத்திற்கு உரை கண்ட தமிழ் பௌத்த ஞானிகள், தமிழர் பேணிய பௌத்த தர்மம் ஆகிய இரு அத்தியாயங்களும், ‘இந்து சமய பௌத்தமத உறவுகள்’ என்ற ஆறாம் பாகத்தில் இந்த மதத்தின் ஆதிமூலங்கள், வேதத்தை எதிர்த்த புத்த வாசனம், புத்தரைப் போற்றும் வள்ளுவர் வேதம், இந்துமதம் ஏற்ற பௌத்த சித்தாந்தம் ஆகிய நான்கு அத்தியாயங்களும், ‘தமிழர் சமுதாயத்தில் பௌத்தத்தின் மறைவு’ என்ற இறுதிப் பாகத்தில் தமிழர் சமுதாயத்தில் பௌத்தத்தின் மறைவு என்ற ஒரு அத்தியாயமும் இடம்பெறுகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71501).
மேலும் பார்க்க:
பௌத்தமும் இஸ்லாமும்: 17171