வ.குணபாலசிங்கம். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2024. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
xviii, 254 பக்கம், விலை: ரூபா 2900., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-6164-82-9.
கிழக்கிலங்கையின் பண்பாட்டு மரபில் முருக வழிபாடு மிகுந்த செல்வாக்கினைச் செலுத்தியுள்ளது. மரபுகளையும் சம்பிரதாயங்களையும் உள்வாங்கிய வழிபாடாக முருக வழிபாட்டை இந்நூல் அடையாளப்படுத்துகின்றது. கிழக்கிலங்கையின் திருப்படைக் கோயில்களின் நிருவாக முறைமை பிரத்தியேகமானது. தேசத்து வன்னிமைகளுக்கும் இக்கோயில்களின் பராமரிப்பிற்கும் இடையிலான தொடர்பினை இந்நூல் பதிவுசெய்கின்றது. மேலும் கிழக்கிலங்கை முருகன் கோயில்களில் இயற்றப்படுகின்ற வழிபாடுகள் பல்வகைமைத் தன்மை கொண்டவை. சங்க இலக்கியங்கள் குறித்துக் காட்டும் வேல் வழிபாட்டு மரபும், வைதீக மரபும், மரபு வழியான பத்ததிகளை (பத்தாசிகளை) அடிப்படையாகக் கொண்ட வழிபாட்டு மரபும் இப்பிரதேசத்தில் வழக்கிலுள்ளன. இந்நிலையில் இந்நூல் கிழக்கிலங்கையில் நிலவும் முருக வழிபாட்டின் வரலாற்றையும் வழமைகளையும் ஆழமாக விபரிக்கின்றது. ஒட்டுமொத்தத்தில் கிழக்கிலங்கையின் பண்பாட்டுக் கருவூலத்தினை அறிய விழைவோருக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் இந்நூல் அடிப்படையாக அமைகின்றது. கலாநிதி வ.குணபாலசிங்கம் மட்டக்களப்பினைப் பிறப்பிடமாகக்கொண்டவர். கிழக்குப் பல்கலைக்கழகத்திலே இளங்கலைமாணிப் பட்டத்தினையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே முதுதத்துவமாணி, கலாநிதிப் பட்டங்களையும் பெற்றவர். கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இந்து நாகரிகத்துறையின் தலைவராகக் கடமைபுரிந்த இவர், தற்போது கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதியாக விளங்குகின்றார்.