17133 கைலாய அந்தாதி (கைலாச புராணம்).

சிங்கை ஆரியச் சக்கரவர்த்தி செகராசசேகரன் (மூலம்), மகாராஜா ஸ்ரீராஜசேகரா (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: கந்தசாமி பாலசுப்பிரமணியம், 1வது பதிப்பு, 2024. (அச்சக விபரம் தரப்படவில்லை).

xii, 120 பக்கம், விலை: ரூபா 1000., அளவு: 20.5×14.5 சமீ.

பல்லவராசசேகரன், இராஜசேகரம் ஆகிய பெயர்களிலும் எழுதிவரும் திரு. கந்தசாமி பாலசுப்பிரமணியம் இலங்கை தமிழ் மருத்துவ ஆராய்ச்சி மன்றத்தின் தவிசாளரும், ஆராய்ச்சியாளருமாவார். தமிழ்ப் பிரதேசத்தில் சித்தா சுகாதார சேவையை 1987இல் தாபித்து 1996வரை அதனை நடத்திவந்தார். சிங்கை மன்னர் பரம்பரையில் தோன்றிய இராசசிம்மனின் வழித்தோன்றலாகிய நூலாசிரியர் தனது மூதாதையரான சிங்கை ஆரியச் சக்கரவர்த்திகளின் கைலாய அந்தாதியை இந்நூல்வழியாகப் பதிப்பித்துள்ளார். நூலாசிரியர் சிங்கைச் செகராசசேகரன் பற்றிய வரலாற்றுக் குறிப்பு, கைலைமலையில் அரசர்கள் வழிபாடு ஆகியவற்றைத் தொடர்ந்து ஈழமண்டலச் சருக்கம், திருமலைச் சருக்கம், பவனோற்பத்திச் சருக்கம், அர்ச்சனாவிதிச் சருக்கம், மச்சாவதாரச் சருக்கம், தருசனாமுத்திச் சருக்கம், திருநகரச் சருக்கம், அகிய பாயிரங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் இந்நூலில் இரணிய இந்திரன், பேரரசன் விருத்திரன், மாவலிச் சக்கரவர்த்தி, சயம்பன், ஆளிமுகன், இராவணேந்திரன், குளக்கோட்டன், மணிநாகன், மாணிக்கராசா முதலான அரசர்களைப் பற்றிய தகவல்களை தொன்மச் சான்றுகள் வழியாகப் பதிவுசெய்திருக்கிறார். கிறீஸ்துவுக்குப் பிற்பட்ட அரசர்களான கயவாகுராசா, பாலசிங்க மகாராசா, சிங்கை ஆரிய சேகரன் ஸ்ரீராஜசேகரன், சிங்கை ஆரியச் சக்கரவர்த்தி குலசேகரன் முதலான அரசர்கள் பற்றிய செய்திகள் தகவல் பரிமாணத்தை அகலச் செய்துள்ளன. சிங்கை ஆரியச் சக்கரவர்த்தி செகராசசேகரன் கைலாச அந்தாதியுடன், செகராசசேகரம் என்ற வைத்திய நூல், செகராசசேகரமாலை என்னும் சோதிட நூல் ஆகியவற்றையும் எழுதியுள்ளார்.

ஏனைய பதிவுகள்