நுவரெலியா: காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகள், ஸ்ரீ காயத்ரி பீடம், ஸ்ரீநகர், 82, லேடி மெக்கலம்ஸ் ட்ரைவ், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2005. (கொழும்பு: Nethy’s Graphics).
x, 81 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ.
பண்டிட் ஸ்ரீ கண்ணையா யோகீஸ்வரர் அவர்களினால் எழுதப்பட்ட உரையுடனான இந்நூல், காயத்ரி சித்தர் ஆர்.கே.முருகேசு சுவாமிகளால் 2005ஆம் ஆண்டு 21ஆம் நாள் ஆனி குருப்பூர்ணிமா தினத்தையெட்டி 17.10.2005 அன்று அச்சிட்டு வெளியிடப்பட்டது. இந்நூல் காயத்ரீ ஸ்ம்ருதி, காயத்ரீ உபநிஷத், காயத்ரீ கீதை என மூன்று இயல்களைக் கொண்டுள்ளது. காயத்ரீ மந்திர எழுத்துக்களில் சொற்களில் பல அரிய பொருள்கள் இருப்பது போலவே அதன் ஒவ்வொரு எழுத்திலும் அரிய சக்திகள் அடங்கியிருக்கின்றன. அந்த சக்திகள் விழிப்புறுவதால் காயத்ரீ சாதகன் பெறும் அரிய பலன்களைக் கூறுவதே காயத்ரீ ஸ்ம்ருதி. அதிலுள்ள 23 ஸ்ம்ருதிகளும் கருத்துரை விளக்கவுரைகளுடன் முதலாம் இயலில் விளக்கப்படுகின்றது. ரிக், யஜ{ர், ஸாம, அதர்வண ஆகிய வேதங்களின் பொருளை விரிவுபடுத்தி விளக்க ப்ராம்மணங்கள் என்ற நூல்கள் பிற்காலத்தில் எழுதப்பட்டன. அவற்றில் அதர்வண வேதத்திற்கு இப்போது கிடைக்கும் ‘கோபதப்ராஹ்மணம்’ என்ற நூலின் 31ஆவது முதல் 38ஆவது வரையான எட்டு காண்டங்கள் ‘காயத்ரீ உபநிஷத்’ எனப்படுகின்றது. இந்த உபநிஷத்தில் பிரம்ம வித்யா, பதார்த்த வித்யா சம்பந்தமான உபநிஷத்தை இங்கு இரண்டாம் இயலில் வழங்கியிருக்கிறார். பிரம்ம வித்தை, யோக வித்தைகளின் சாரத்தை உள்ளடக்கி ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் பகவத் கீதை உருவானதுபோல, காயத்ரீ மந்திரத்தின் உட்பொருளைச் சுருக்கமாக விளக்கி ‘காயத்ரீ கீதை’ உண்டாயிற்று. காயத்ரீ கீதையை கருத்துரை, விளக்கவுரைகளுடன் மூன்றாம் இயலில் வழங்கியுள்ளார்.