செல்லப்பா நடராசா (மூலம்), செல்லையா கிருஷ்ணராசா (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: திருமதி பத்மாதேவி நடராசா, 62,சைவப் பாடசாலை வீதி, கோண்டாவில் மேற்கு, கோண்டாவில், 1வது பதிப்பு, 2023. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).
xxiv, 254 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 1500., அளவு: 21×15 சமீ., ISBN: 978-624-93270-1-6.
அமரர் செல்லப்பா நடராசா அவர்களின் 41 பண்பாட்டு ஆய்வுக் கட்டுரைகள் (1959-2012) இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. மண்ணும் மொழிப்பற்றும், பண்பாடும் பகிர்வும், வாழ்வும் வழக்காறும், இயற்கையுடன் இணைந்த வாழ்வு, பனை வளர்த்த பண்பாடு, கண்ட நகர்வில் யாழ்ப்பாணப் பண்பாடு, தடம் மாறும் திருமலை ஆகிய ஏழு பகுதிகளின் கீழ் இக்கட்டுரைகள் தொகுக்கப்பெற்றுள்ளன. சமூக, பண்பாட்டு, அரசியல் செயற்பாட்டாளர்களுக்கான அத்தியாவசியமான கற்கைகளுக்கான கைந்நூலாக இந்நூல் திகழ்கின்றது. இந்நூல் யாழ்ப்பாணத்தின் கதை மட்டுமல்ல சகல வழிகளிலும் ஆதிக்க நீக்கம் பெற அல்லது பலதள காலனிய நீக்கங்கள் பெற முனைந்து வாழுகின்ற சமூகங்களது கதையுமாகும். மனிதர்கள் எப்படி வாழ்ந்திருக்கின்றார்கள், செயற்பட்டிருக்கின்றார்கள், விடயங்கள் எவ்வாறு காணப்பட்டிருக்கின்றன என்பதை இந்நூல் பேசுகின்றது. ‘பார்லிமென்ட் நடராசா’ என்று பலராலும் அழைக்கப்பட்ட அமரர் செல்லப்பா நடராசா கால் நூற்றாண்டுக்கு முன்னர் ‘தினகரன் நடா’ என்றே எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர். இவரது ஊர் கோண்டாவில். தினகரன் பத்திரிகை அலுவலகத்தில் 1954ஆம் ஆண்டு முதல் 1960ஆம் ஆண்டு இறுதிவரை கடமையாற்றியபோது அரசியல், இலக்கியம், நகைச்சுவை என்னும் பல்வேறு துறைகளிலும் எழுதிவந்தவர். இவரது மற்றொரு நூலான ‘எனது நோக்கில் பாராளுமன்றம்’ பாராளுமன்றத்தின் மரபுகளையும் நடைமுறைகளையும் மிக்க இலக்கியச் சுவையோடு வழங்கியிருந்தது. இவர் எழுத்தாற்றலும் இலக்கிய ஆர்வமும் பாராளுமன்றத்திற் பல்லாண்டு பணி புரிந்து பெற்ற அநுபவமும் இந்நூலின் வளத்திற்கு மெருகூட்டியிருந்தது. தொகுப்பாசிரியர் பேராசிரியர் செ.கிருஷ்ணராசா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறையில் பணியாற்றியவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 72569).
மேலும் பார்க்க:
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கப் பொன்விழா மலர்: 17179