சரோஜா சிவச்சந்திரன். யாழ்ப்பாணம்: மகளிர் அபிவிருத்தி நிலையம், இல.07, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: தீபம் பிறின்டர்ஸ், இல. 717, காங்கேசன்துறை வீதி).
iv, 66 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 977-180-03100-0-2., ISSN: 1800-3109.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்காக இலங்கை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு 2011 நவம்பரில் தெளிவான பரந்தமைந்த ஆய்வுகளின் அடிப்படையிலான அறிக்கையினை சமர்ப்பித்திருந்தது. ஆயினும் அவ்வறிக்கை சிபார்சு செய்துள்ள நல்லிணக்கத்திற்கான செயற்பாடுகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவில்லை என்ற குறைபாடு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்கள்கூட பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைந்ததாக இல்லை. பாதிப்புக்குள்ளாகிய மக்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்களும் சிறுவரும் என்பதை ஆணைக்குழு வலிதாகக் காட்டியுள்ளது. ஆயினும் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் பெரும்பாலான பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நழுவவிடப்பட்டுள்ளமை அவதானிக்க முடிகின்றது. இந்நூலில் ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பிரதான விடயங்களைச் சுருக்கமாக எடுத்துக்கூறி, பெண்கள் சிறுவர்கள் தொடர்பாக மேலும் கவனிக்கவேண்டிய விடயங்களையும் ஆசிரியர் ஆராய்ந்துள்ளார். அறிக்கையில் பெண்கள் தொடர்பாக கவனிக்க வேண்டிய விடயங்களாக பெண்களுக்கான உளவள ஆலோசனை, பெண்கள் பாதுகாப்பு, இராணுவத்தின் பிரசன்னமும் பாதுகாப்பும், இளவயது திருமணம், காணி தொடர்பான பெண்கள் உரிமைகள், வீட்டு உரிமையும் பெண்களும், வாழ்வாதார நடவடிக்கைகளும் வேலைவாய்ப்பும், நிறுவன ரீதியான கட்டமைப்புகள் ஆகிய அம்சங்கள் இங்கு விரிவாக ஆராயப்பட்டுள்ளன.