S.Z. ஜெயசிங். தமிழ்நாடு: அன்னம்மாள் பதிப்பகம், 499, 3ஆவது தெற்குத் தெரு, தியாகராஜ நகர், திருநெல்வேலி 627011, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2022. (தமிழ்நாடு: ஜெயராஜ் ஆப்செட் பிரிண்டர்ஸ், பாளையங்கோட்டை).
164 பக்கம், ஒளிப்படம், விலை: இந்திய ரூபா 150., அளவு: 21.5×14 சமீ.
இரண்டு பகுதிகளாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள 15 அரசியல் கட்டுரைகளை இந்நூல் கொண்டுள்ளது. முதலாவது பகுதியில் இலங்கைத் தமிழர் வரலாறு, சிறிமா சாஸ்திரி உடன்படிக்கை, இந்திய குடியுரிமைச் சட்டமும் இலங்கைத் தமிழ் அகதிகளும், ராஜபக்சே பிரதமரான 2020 பொதுத்தேர்தல்-ஓர் ஆய்வு, இலங்கையில் ஒரே நாடு ஒரே சட்டம், அரசியல் பொருளாதார நெருக்கடியில் இலங்கை ஆகிய ஆறு கட்டுரைகளும், இரண்டாவது பகுதியில் இந்திய குடியுரிமைச் சட்டங்கள்-ஒரு பார்வை, இந்தியாவின் புதிய கல்விக் கொள்கை, இந்திய அரசியலில் பெண்கள், இந்தியாவின் பன்முகத்தன்மை, இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்கள், இந்தியாவில் வீதியோரக் குழந்தைகள், இந்தியத் தேர்தல் முறை, தமிழகத்தில் சாதியக் கொடுமைகள், பெரியாரின் தீண்டாமை எதிர்ப்பு ஆகிய ஒன்பது கட்டுரைகளும், ‘தொழிற்சங்கத் தோழர் பால்வண்ணம்’ என்ற சிறப்புக் கட்டுரையும் இடம்பெற்றுள்ளன. 1964 ஒக்டோபர் 30 சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கையின் கீழ் மலையக மண்ணிலிருந்து இலங்கை அரசினால் வேரோடு பிடுங்கி இந்திய மண்ணில் வீசி எறியப்பட்ட லட்சக்கணக்கானவர்களுள் இந்நூலாசிரியரும் ஒருவர். இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்து பின்னர் அங்கேயே சிறிதுகாலம் அரசியல் விஞ்ஞானத்துறை உதவி விரிவுரையாளராகப் பணியாற்றிய ஜெயசிங், தனது முதலாவது நூலான ‘இலங்கைவாழ் இந்தியர்களின் குடி அகல்வு’ என்ற நூலை அட்டன் நகரில் வெளியிட்டிருந்தார். பின்னர் இந்தியாவில் பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றிய போது எழுதப்பட்ட மற்றொரு நூலை வெளியிட பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம் தடைசெய்திருந்தது. மிக நீண்ட இடைவெளியின் பின்னர் ஆசிரியரின் இரண்டாவது நூலாக ‘இலங்கை இந்திய அரசியல் சமூகப்பார்வை’ என்ற இந்நூல் வெளிவந்துள்ளது.