சிவ சந்திரகாந்தன் (பிள்ளையான்). மட்டக்களப்பு: சந்திரோதயம் கலை இலக்கியப் பெருமன்றம், 1வது பதிப்பு, மார்கழி 2023. (அசசக விபரம் தரப்படவில்லை).
(6), 329 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 1950., அளவு: 23.5×15.5 சமீ., ISBN: 978-624-6459-00-0.
தேடலுக்கான தொடக்கப்புள்ளி, புளியந்தீவு, ஈஸ்டர் படுகொலை, உலகளாவிய இஸ்லாமியப் பயங்கரவாதம், ஐ.எஸ். (இஸ்லாமிய அரசு), இஸ்லாம், இலங்கை இந்திய தவ்ஹீத் எழுச்சி, காத்தான்குடி, அரேபிய மயமாக்கலும் பண்பாட்டு மாற்றமும், ஐ.எஸ். ஆதரவு அமைப்பின் உருவாக்கம், நல்லாட்சி அரசும் பொறுப்புக் கூறலும், முடிவுரை ஆகிய பன்னிரண்டு அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இலங்கையில் 2019இல் மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் தாக்குதலின் பின்புலத்தில் நின்று இலங்கையில் அமைதியாக வாழ்ந்துவந்த முஸ்லீம்கள் மத்தியில் எப்படி மத அடிப்படைவாத சிந்தனைகள் தாக்கம் செலுத்தத் தொடங்கின? மத்திய கிழக்குநாடுகளுடனான வேலைவாய்ப்பு மற்றும் மார்க்கக் கல்வி போன்றவை காரணமான தொடர்பாடல்கள் எப்படியான அரபுமயமாக்கலை இலங்கைத் தீவில்; விதைத்தன? நம்மிடையே பிறந்து வளர்ந்த இந்த இளைஞர்கள் எப்படி இந்த வஹாபிச சிந்தனைகளின்பால் ஈர்க்கப்பட்டனர்? என்பன போன்ற மேலும் பல கேள்விகளுக்கு விடைதேடும் முயற்சியாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ‘பிள்ளையான்’ என்று அறியப்பட்ட இந்நூலாசிரியர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் தன் சிறுவயதில் குழந்தைப் போராளியாக இணைந்துகொண்டவர். பின்னாளில் அரசியல் நீரோட்டத்தில் இணைந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) என்ற அரசியல் கட்சியின் தலைவராகி, கிழக்கு மாகாண முதலமைச்சராகவும், ஜனாதிபதியின் ஆலோசகர்களுள் ஒருவராகவும், ஐந்தாண்டு கால தடுப்புக்காவல் கைதியாகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும், இராஜாங்க அமைச்சராகவும் சேவையாற்றியவர். இவர் முன்னதாக தனது சிறைவாழ்க்கையின் போது 2017இல் ‘வேட்கை’ என்ற பெயரில் நூலொன்றினை எழுதியிருந்தார். ‘ஈஸ்டர் படுகொலை’ இவரது இரண்டாவது நூலாகும்.