பொன்னையா மாணிக்கவாசகம். வவுனியா: தனேத்ரா பதிப்பகம், 7/3, பத்தாவது ஒழுங்கை, வைரவபுளியங்குளம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2023. (வவுனியா: பொய்கை பதிப்பகம், கந்தசாமி கோயில் வீதி).
xiv, 408+70 பக்கம், விலை: ரூபா 1600., அளவு: 20.5×15 சமீ., ISBN: 978-624-98500-1-9.
ஊடகவியலாளர் அமரர் பி.மாணிக்கவாசகர் அவர்கள் எழுதியிருந்த 66 கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அவரது துணைவியார் திருமதி நாகேஸ்வரி மாணிக்கவாசகம் அவர்களால் பதிப்பிக்கப்பட்டு வெளிவந்துள்ளது. தனது மறைவுக்கு முன்னரே இவற்றைத் தேடித் தொகுத்து நூலுருவாக்கும் முயற்சியில் இறங்கியிருந்த வேளையில் அவரது இழப்பு நேர்ந்துள்ளது. ‘போர்வைக்குள் ஓர் இருட்டறை’ முதல், ‘இந்தியாவின் ஒதுங்கியிருந்து செயற்படுகின்ற போக்கு’ ஈறாக இந்த 66 கட்டுரைகளும் நூலின் முதற் பகுதியில் 408 பக்கங்களில் இடம்பெற்றுள்ளன. தனித்து இலக்கமிடப்பட்டுள்ள இரண்டாவது பகுதியில் 70 பக்கங்களிலும், நூலாசிரியர் பற்றி ‘எமது நெஞ்சில் அலைமோதும் நினைவுகள் நிகழ்வுகள்’ என்ற தலைப்பில் அமரர் பி.மாணிக்கவாசகர் அவர்களின் மறைவின்போது வழங்கப்பட்ட பல்வேறு பிரமுகர்களின் அஞ்சலி உரைகளும், நினைவுப் பதிகை கட்டுரைகளும் இணைக்கப்பட்டுள்ளன. இவ்வஞ்சலிக் கட்டுரைகளை த.மங்களேஸ்வரன், சி.மௌனகுரு, எஸ்.ஸ்ரீகஜன், சி.ரகுராம், பாரதி இராஜநாயகம், கே.ரீ.கணேசலிங்கம், அ.நிக்சன், வெற்றிச்செல்வி சந்திரகலா, ஆர்.ராம், மேழிக்குமரன், தை.தனராஜ், வி.தேவராஜ், மிதயா கானவி, இரா.துரைரத்தினம், துரைசாமி நடராஜா, சுப்பிரமணியம் ஜெயச்சந்திரன் (அஞ்சலிக் கவிதை), லதா கந்தையா (அஞ்சலிக் கவிதை), அரூஸ், எஸ்.எம்.வரதராஜன், ந.தாமரைச்செல்வி (அஞ்சலிக் கவிதை), விவேகானந்தனூர் சதீஸ் ஆகியோர் எழுதி வழங்கியுள்ளனர்.