லக்சிரி பெர்ணாந்து (மூலம்), பெ.முத்துலிங்கம் (தமிழாக்கம்). கண்டி: தொழிலாளர் விவசாயிகள் நிறுவனம், 1வது பதிப்பு ஜூலை 1983. (கண்டி: லேக்வியூ அச்சகம், 245/3 A, டீ.எஸ்.சேனநாயக்க வீதி).
32 பக்கம், ஒளிப்படங்கள், புள்ளிவிபர அட்டவணை, விலை: ரூபா 2.00, அளவு: 20×14 சமீ.
இதுவே வரலாற்றில் வேலைநிறுத்தம் செய்த ஊழியர்கள் பதவி நீக்கப்பட்ட முதலாவது சம்பவமாகும். 1977 தேர்தலில் வாராந்தம் 8 இறாத்தல் உணவுப் பொருட்களை மலிவு விலையில் வழங்குவதாக பிரசாரம் செய்ததும் ஐ.தே.கட்சியின் அமோக வெற்றிக்கு காரணமாகும். அவரின் திறந்த பொருளாதார கொள்கையால் அதனை செயற்படுத்த முடியவில்லை. விலைவாசி உயர்வால் மாத சம்பளத்தை 300 ரூபாயாக (தினம் 10 ரூபாய்) அதிகரித்தும், மேலதிக கொடுப்பனவாக 5 ரூபாயை வழங்குமாறும் பல தொழிற்சங்கங்கள் விடுத்திருந்த கோரிக்கையை அப்போதைய நிதியமைச்சர் றொனி டீ மெல் நிராகரித்ததால் வேலை நிறுத்தத்துக்கு திட்டமிட்டன. 1980 ஜூன் 5 மதிய உணவு நேரம் நாடு முழுவதும் லட்சக்கணக்கான அரச மற்றும் தனியார்துறை ஊழியர்கள் தங்களின் பணியிடங்களுக்கு முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோட்டை அரச விநியோக பிரிவில் போராடியவர்களை ஜீப்பில் வந்த குண்டர்கள்; தாக்கி கைக்குண்டை வீசியதில் சோமபால என்ற ஊழியர் பலியானார். ஜூலை 16 அமைச்சரவை கூடியதன் பின்னர், நாடு முழுவதும் அவசரகால சட்டம் அமுலானது. ரயில் சேவை, இ.போ.ச, தபால், சுகாதாரம், கல்வி, துறைமுகம், பெற்றோலியம் போன்றவை அவசரகால சட்டத்தின் கீழ் அத்தியாவசிய சேவைகளாக்கப்பட்டன. ஜூலை 23க்கு முன்னர் கடமைக்கு சமுகமளிக்குமாறு சில நிபந்தனைகளுடன் போராட்டக்காரருக்கு அரசு இறுதி அழைப்பு விடுத்ததுடன், அவர்களின் ஜூலை சம்பளமும் நிறுத்தப்பட்டது. கடமைக்கு சமுகமளிக்காத 40,356 பேர் சட்ட விதிகளின்படி, பதவியை இழந்தவர்களாக கருதப்படுவார்கள் என பிரதமர் ஆர்.பிரேமதாச ஜூலை 24 அறிவித்தார். இவர்களுக்கு பதிலாக, வேலை வங்கியில் பதிவு செய்த 8,421 பேர் அரச அலுவலகங்கள், கூட்டுத்தாபனங்களில் ஐ.தே.க. எம்.பிக்களின் சிபாரிசுடன் நியமிக்கப்பட்டனர். இந்நூல் இரத்மலானைப் போராட்டம், அரசாங்கத்தின் பதில் நடவடிக்கை, ஐக்கிய தொழிற்சங்க செயற்கூட்டு கமிட்டி, வங்கி வேலைநிறுத்தம் 1978, 1978ஆம் ஆண்டு அடையாள வேலைநிறுத்தம், அத்தியாவசிய சேவைச் சட்டம், 1980-புதிய வருடம், பேராளர் மாநாடு, எதிர்ப்புத் தினம், சோமபாலவின் மரணம், வேலைநிறுத்த தீர்மானம், அரச அடக்குமுறை, அரை-பொது வேலைநிறுத்தம், வேலைநிறுத்தத்தில் பங்குபற்றியோரின் எண்ணிக்கை, தொழிற்சங்கங்களின் கருத்து, சேவைகளிலிருந்து நீக்குதல், எழுச்சி, சத்தியாக்கிரகம், மாற்று வேலை, படிப்பினைகள் ஆகிய தலைப்புகளில் இந்நூலில் 1980இன் பொது வேலைநிறுத்தம் பற்றிய பல்வேறு தகவல்கள் பதிவாக்கப்பட்டுள்ளன. நவ மக்கட் கல்வி நூல் வரிசையில் முதலாவது நூலாக வெளியிடப்பட்டது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 29035).