17241 அந்தோனியோ கிராம்ஷி ஒரு சுருக்க அறிமுகம்.

நியுட்டன் குணசிங்க (சிங்கள மூலம்), சி.கனகசிங்கம் (தமிழாக்கம்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2024. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).

84 பக்கம், விலை: ரூபா 550., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-6164-59-1.

இடதுசாரி தீவிரவாத அரசியலால் ஈர்க்கப்பட்ட அந்தோனியோ கிராம்ஷி (1891-1937) இத்தாலியின் தலைசிறந்த அறிவாளியாக விளங்கியவர். 1919-1920 காலகட்டத்தில் இத்தாலியில் இடம்பெற்ற தொழிலாளர் வர்க்கக் கிளர்ச்சிகளில் தலைமையேற்று வழிநடத்திய தலைவர்களுள் ஒருவர். அந்தோனியோ கிராம்ஷி பற்றிய இந்நூல் கிராம்ஷியின் அரசியல் சிந்தனைகளை சுருக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துக் கூறுகின்றது. இதன் ஆசிரியர் நியூட்டன் குணசிங்க (1946-1988) அறிவுலகில் நன்கு அறியப்பட்ட புலமை ஆளுமைகளில் ஒருவராவார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சமூகவியலை சிறப்புப் பாடமாகக் கற்று முதல்தரச் சித்தி பெற்ற இவர் அவுஸ்திரேலியாவின் மொனாஷ் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டத்தினையும் பிரிட்டனின் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திக் கற்கைகளுக்கான நிறுவனத்தில் கலாநிதிப் பட்டத்தினையும் பெற்றவர். கொழும்பு, பேராதனைப் பல்கலைக்கழகங்களில் சமூகவியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளராகக் கடமையாற்றியவர். கண்டியில் அமைந்துள்ள தொழிலாளர் மற்றும் விவசாயிகள் கல்விக் கழகத்தில் (Workers and Peasants Institute) 1985ஆம் ஆண்டு ‘கிராம்ஷியின் சிந்தனைகள்’ என்னும் விடயப்பொருள் குறித்து அவர் ஆற்றிய உரை, பின்னர் சிங்கள மொழியில் நூலாக வெளியிடப்பட்டது. இதனைச் சிங்கள மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும் பணியினை சட்டத்தரணி சி. கனகசிங்கம் மேற்கொண்டுள்ளார். முன்னுரை, அரசியல் பற்றி கிராம்ஷியின் அடிப்படைக் கருத்துகள், மேலாண்மையும் அடக்குமுறையும், விவசாயிகள் கூட்டு, அரசியல் நெருக்கடி, கருத்தியலும் புத்திஜீவிகளும், அவவயப் புத்திஜீவிகளும் அவர்களது பணிகளும், பாசிசவாதம் பற்றிய விளக்கம், சீசர்வாதம், பாசிசவாதம், பாசிசவாதத்தின் குணவியல்புகள், பாசிசவாதத்திற்கு எதிரான போராட்டமும் புரட்சிவாதக் கட்சிகளும் ஆகிய 12 அத்தியாயங்களில் இந்நூல் விரிகின்றது. மேலாண்மை-சிவில் சமூகம்-கருத்துநிலை: அந்தோனியோ கிராம்ஷியின் சிந்தனைகள், அந்தோனியோ கிராம்ஷியின் அரசுக் கோட்பாடு ஆகிய இரு பின்னிணைப்புகள் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்