அனுஷா ஸ்ரீதரன் (மூலம்), குமாரவேலு கணேசன் (பதிப்பாசிரியர்). அவுஸ்திரேலியா: ஸ்டெம் கல்வி அறக்கொடை, STEM-KALVI Charity, 1வது பதிப்பு, 2024. (அச்சக விபரம் தரப்படவில்லை).
16 பக்கம், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5சமீ., ISBN: 978-1-923222-31-1.
ஆண்டாள்குளம் பாடசாலையின் புதிய விஞ்ஞான ஆய்வுகூடத் திறப்புவிழாவுக்கு பிரதம விருந்தினராக வைத்திய கலாநிதி சுந்தர் அழைக்கப்பட்டிருந்தார். அவரது பழைய ஞாபகங்கள் விரிகின்றன. ட்ரைடனோபியா (வுசவையெழியை) என்ற நிறப்பார்வைக் குறைபாடு கொண்ட அவர் திறமை மிக்க சிறுவனாக இருந்தபோதிலும், ஆண்டாள்குளம் பாடசாலை அனுமதிப் பரீட்சையில் பச்சை நிறத்தை நீலநிறம் என்று கூறியதால் மந்தபுத்தி கொண்டவர் என ஆண்டான்குளம் அதிபரும் ஆசிரியரும் தீர்மானித்து சுந்தரை தரம் குறைத்து பாலர் வகுப்பில் அனுமதிக்கிறார்கள். இந்த விஞ்ஞான அறிவு இல்லாமையால் ஆண்டான்குளம் அதிபரும் ஆசிரியரும் தவறான முடிவை எடுத்திருக்கிறார்கள். பாடசாலையில் மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் தமது அறிவை வளர்த்துக்கொள்ளவும் இற்றைப்படுத்திக்கொள்ளவும் வேண்டும் என்பதை இக்கதை வலியுறுத்துகின்றது. இந்நூலாசிரியர் அனுஷா கொழும்பில் பிறந்து வளர்ந்தவர். பின்னாளில் அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்து அங்கு மெல்பர்னில் வாழ்ந்து வருகின்றார். இவர் மொனாஷ் பல்கலைக்கழகத்தில் கணிதத்துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றவர். அவுஸ்திரேலியாவிலிருந்து ஸ்டெம் கல்வி அறக்கொடையினரால் 5 முதல் 10 வயதுக்குட்பட்ட சிறார்களின்; மொழியறிவு விருத்திக்கு பயிற்சியளிக்கும் வகையில் தயாரித்து வழங்கப்பட்ட 35 சிறுவர்களுக்கான நூல்களில் இந்நூலும் ஒன்றாகும். ஐந்து மட்டங்களைக் கொண்ட சிறுவர்களுக்கான நூல்களின் வாயிலாக மழலைச் சிறார்கள் தங்கள் தமிழ் அறிவை வளர்க்க இந்நூல்தொகை உதவுகின்றது. இந்நூலின் வாசிப்பு மட்டம் 4.1 ஆகும்.