பூங்கோதை (மூலம்), குமாரவேலு கணேசன் (பதிப்பாசிரியர்). அவுஸ்திரேலியா: ஸ்டெம் கல்வி அறக்கொடை, STEM-KALVI Charity, 1வது பதிப்பு, 2024. (அச்சக விபரம் தரப்படவில்லை).
16 பக்கம், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-1-923222-23-6.
இந்நூலின் வாசிப்பு மட்டம் 3.3 ஆகும். அழகான நதி ஓரமாக இருந்த சிறிய மலையில் வாழ்ந்த மூன்று விலங்குகளின் நட்பு பற்றிய கதை இது. சீனு என்ற குரங்கு, தீபா என்ற வரிக்குதிரை, கயல் என்ற யானை ஆகிய மூன்று தோழர்கள். இவர்கள் வேறுபட்ட நிறங்களையும் வடிவங்களையும் கொண்ட விலங்குகள் அக்காட்டில் பிரிந்து வாழ்வதை மறுத்து, ‘வானவில் அணிவகுப்பு’ என்ற திட்டத்தின் மூலம் அனைத்து விலங்குகளையும் ஒன்று சேர்த்து, ‘யார் எந்த நிறமாக இருந்தாலும், வேறுபட்ட தோல் வகைகளையும் உருவத்தையும் கொண்டிருந்தாலும், அதுவே அவர்களின் தனித்தன்மை” என்பதனை பெருமையுடன் ஏற்று ஒற்றுமையாக வாழ்வதாக இக்கதை எழுதப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இக்கதையின் வழியாக பல புதிய தமிழ்ச் சொற்கள் புகட்டப்பட்டுள்ளன. அவுஸ்திரேலியாவிலிருந்து ஸ்டெம் கல்வி அறக்கொடையினரால் 5 முதல் 10 வயதுக்குட்பட்ட சிறார்களின்; மொழியறிவு விருத்திக்கு பயிற்சியளிக்கும் வகையில் தயாரித்து வழங்கப்பட்ட 35 சிறுவர்களுக்கான நூல்களில் இந்நூலும் ஒன்றாகும். ஐந்து மட்டங்களைக் கொண்ட சிறுவர்களுக்கான நூல்களின் வாயிலாக மழலைச் சிறார்கள் தங்கள் தமிழ் அறிவை வளர்க்க இந்நூல்தொகை உதவுகின்றது. கல்வித்துறைப் பட்டதாரியான நூலாசிரியர் பூங்கோதை, இலங்கையிலிருந்து 1989இல் ஐக்கிய இராச்சியத்துக்குப் பெற்றோருடன் புலம்பெயர்ந்து சென்றவர். அங்கு அரச பாடசாலையில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றுகின்றார்.