மேகலா இரஞ்சித் (மூலம்), குமாரவேலு கணேசன் (பதிப்பாசிரியர்). அவுஸ்திரேலியா: ஸ்டெம் கல்வி அறக்கொடை, STEM-KALVI Charity, 1வது பதிப்பு, 2024. (அச்சக விபரம் தரப்படவில்லை).
16 பக்கம், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-1-923222-29-8.
பல்வேறு நிறங்களில் காய்த்துத் தொங்கும் காய்கறித் தோட்டமொன்றை ஏரம்பு அப்பாவின் ‘வானவில் தோட்டமாக’ உருவகித்து காய்கறிகளின் பெயர், நிறம் ஆகியவற்றை சிறுவர் மனதில் பதியம் வைக்கும் முயற்சி இது. சிவப்பு மிளகாயும் தக்காளியும், செம்மஞ்சள் பூசணிக்காய்கள், மஞ்சள் வண்ண வாழைக்குலைகள், பச்சைப் பயற்றங்காய்களும் பாவற்காய்களும், நீலநிற விரலிப் பழங்கள், கருநீல நிறத்து அவுரி நெல்லிகள், ஊதா நிறத்து கத்தரிக்காய்கள் என வானவில்லின் வண்ண நிற ஒழுங்கில் வண்ணப்படங்களாக காய்கறிகள் இந்நூலில் நிறைந்துள்ளன. இந்நூலின் வாசிப்பு மட்டம் 2.2 ஆகும். மாணவர்களுக்கு இக்கதையின் வழியாக பல புதிய தமிழ்ச் சொற்கள் புகட்டப்பட்டுள்ளன. அவுஸ்திரேலியாவிலிருந்து ஸ்டெம் கல்வி அறக்கொடையினரால் 5 முதல் 10 வயதுக்குட்பட்ட சிறார்களின் மொழியறிவு விருத்திக்கு பயிற்சியளிக்கும் வகையில் தயாரித்து வழங்கப்பட்ட 35 சிறுவர்களுக்கான நூல்களில் இந்நூலும் ஒன்றாகும். ஐந்து மட்டங்களைக் கொண்ட சிறுவர்களுக்கான நூல்களின் வாயிலாக மழலைச் சிறார்கள் தங்கள் தமிழ் அறிவை வளர்க்க இந்நூல்தொகை உதவுகின்றது. திருமதி மேகலா ரஞ்சித் இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சிப் பகுதியில் அமைந்துள்ள கரணவாயைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது நியூசீலாந்தில் வசித்து வருகிறார். அங்கு வெலிங்டன் தமிழ்ச் சங்கத்தின் வெளியீட்டுப் பதிப்பாளராக 2006-2012 காலகட்டத்தில் பணியாற்றியுள்ளார்.