17352 விளையாட்டுப்பிள்ளை ஆர்த்தி (2.3).

அனுஷா ஸ்ரீதரன் (மூலம்), குமாரவேலு கணேசன் (பதிப்பாசிரியர்). அவுஸ்திரேலியா: ஸ்டெம் கல்வி அறக்கொடை, STEM-KALVI Charity, 1வது பதிப்பு, 2024. (அச்சக விபரம் தரப்படவில்லை).

16 பக்கம், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-1-923222-32-8.

அன்றாடம் சிறு கணித விளையாட்டுகளின் மூலமும் சிறுவர்கள் கற்றுக்கொள்ளலாம் என்பதை இச்சிறு கதை விளக்குகின்றது. ஆர்த்தி தூங்கும்போது கடிகாரத்தின் டிக் டிக் ஓசையினை எண்ணிக்கொள்வதையும், பாடசாலை மாடிப்படியேறும் போது படிக்கட்டுகளை எண்ணுவதம், தந்தையுடன் பாடசாலைக்குப் போகும்போதும் வரும்போதும் இயல்பாகவே வாகனங்களின் இலக்கத் தகடுகளின் எண்களைக் கூட்டி மனதுக்குள் கணக்குப் போடுவதும் கணிதப் பரீட்சையில் அவளுக்கு ஆசிரியர்களே அதிசயிக்கும் அளவுக்கு வெற்றியீட்டிக் கொடுக்கின்றது. இந்நூலாசிரியர் அனுஷா கொழும்பில் பிறந்து வளர்ந்தவர். பின்னாளில் அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்து அங்கு மெல்பர்னில் வாழ்ந்து வருகின்றார். இவர் மொனாஷ் பல்கலைக்கழகத்தில் கணிதத்துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றவர். அவுஸ்திரேலியாவிலிருந்து ஸ்டெம் கல்வி அறக்கொடையினரால் 5 முதல் 10 வயதுக்குட்பட்ட சிறார்களின்; மொழியறிவு விருத்திக்கு பயிற்சியளிக்கும் வகையில் தயாரித்து வழங்கப்பட்ட 35 சிறுவர்களுக்கான நூல்களில் இந்நூலும் ஒன்றாகும். ஐந்து மட்டங்களைக் கொண்ட சிறுவர்களுக்கான நூல்களின் வாயிலாக மழலைச் சிறார்கள் தங்கள் தமிழ் அறிவை வளர்க்க இந்நூல்தொகை உதவுகின்றது. இந்நூலின் வாசிப்பு மட்டம் 2.3ஆகும்.

ஏனைய பதிவுகள்