நேசராசா சந்தோஷ். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).
64 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-6601-16-4.
நாம் இவ்வுலகில் பார்த்தவற்றையும் கற்பனை செய்தவற்றையும் வெளிக்கொணர்வதற்கு கட்புலக் கலை ஒரு சிறந்த ஊடகமாகும். ஓவியங்கள் எப்போதும் தனித்துவமான கலை வெளிப்பாடு: தனித்த திறமையின் வெளிப்பாடாக கலையுணர்வுடன் வரையப்படுபவை. சொல்லவந்த விடயத்தை அழகாக கோடுகளால் வரைந்து வெளிப்படுத்துவதென்பது அனைவராலும் செய்யக்கூடிய ஒன்றல்ல. ஒரு சிலரிடமிருந்தே இவ்வாளுமை இயல்பாக வெளிப்படுகின்றது. இந்த வகையில் பருத்தித்துறை யாழ்/வேலாயுதம் மகா வித்தியாலய மாணவனான செல்வன் நேசராசா சந்தோஷ் ‘கருவுயிர்ப்பு’ எனும் ஓர் அழகிய படைப்பின் ஊடாக தனது எண்ணங்களை சித்திரங்களாக வெளிப்படுத்தியுள்ளார்;. இது இவரது முதல் முயற்சியாகும். எவ்வித முறையான ஓவியக் கற்கைப் பின்புலங்களுமின்றி இதை பரீட்சார்த்தமாக இவர் மேற்கொண்டுள்ளார். அன்பு, இரக்கம், தேடல் விழிப்புணர்வு என்பவற்றை இன்றைய காலத்திற்கே உரித்தான வகையில் இவர் வெளிப்படுத்திய விதம் சிறப்பாக அமைந்துள்ளது. செல்வன் நேசராசா சந்தோஷ் வடமராட்சியில் பொற்பதி குடத்தனையை பிறப்பிடமாகக் கொண்டவர். இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 388ஆவது நூலாக வெளிவந்துள்ளது.