த.செ.ஞானவேல். சென்னை 600 004: போருக்கு எதிரான பத்திரிகையாளர் அமைப்பு, நல்லோர் பதிப்பகம், 68, லஸ் கோவில் சாலை, மயிலாப்பூர், 1வது பதிப்பு, நவம்பர் 2009. (சென்னை 14: தேவன் அச்சகம், இராயப்பேட்டை).
(102) பக்கம், வண்ண ஒளிப்படங்கள் விலை: இந்திய ரூபா 140., அளவு: 17.5×24.5 சமீ.
2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி மட்டும் இருபதாயிரத்துக்கும் அதிகமான ஈழத்தமிழர்கள் வன்னிப் பெருநிலப்பரப்பில் இல்கை அரசினால் கொல்லப்பட்டார்கள். காயமுற்றவர்களின் உயிர் பிரியும் வரை கூட அவர்களால் பொறுமை காக்க முடியவில்லை. பெரிய பள்ளங்களைத் தோண்டிக் குவியல் குவியலாக மனிதச் சடலங்களை புதைத்துவிட்டு உலகத்தின் பெரிய மயானத்தை உருவாக்கிச் சாதனை படைத்தார்கள் இலங்கை ஆட்சியாளர்கள். ஆதாரங்களை அழித்த இறுமாப்போடு இலங்கையில் போர்க்குற்றம் என்று ஒன்றுமே நடக்கவில்லை என்று பேட்டியும் கொடுத்தார்கள். ஆயிரக்கணக்கான மக்களின் பச்சை இரத்தம் பீய்ச்சி அடித்த திசைகளில் எல்லாம் அலைந்து திரிந்த காற்று, இலங்கை அரசின் இனப்படுகொலைக்குச் சாட்சியானது. கைவிடப்பட்ட அப்பாவி மனிதர்களின் ரத்த வாசம் வரலாற்று ஆவணமாகக் களத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களிலும் படிந்திருப்பதை இந்த புகைப்படத் தொகுப்பின் பக்கங்கள் தோறும் காணமுடிகின்றது. நம் முகத்தில் அறைகின்ற காட்சிப் பதிவுகளில் நூறு படங்களை மட்டும் தொகுத்து வரலாற்று ஆவணமாக்கும் முயற்சி இதுவாகும். இனம் கடந்து, மொழி கடந்து, நாடு கடந்தும் இந்த நூலில் பிரமுகர்களின் உணர்வுகள் பதிவாகியிருக்கின்றன. திரைப்பட நடிகர்கள், பாடலாசிரியர்கள், கவிஞர்கள், இயக்குநர்கள், பத்திரிகையாளர்கள் என நூற்றுவரின் சுருக்கமானதும் உணர்வுபூர்வமானதுமான கருத்துக்கள், கவி வரிகள் என்பன புகைப்படங்களுக்குப் பொருத்தமாக பதிவுசெய்யப்பட்டுள்ளன.