திருஞான.பாலச்சந்திர ஓதுவா மூர்த்திகள், சிவகௌரி கிரீஷ்குமார் (பண்ணிசை), செல்லம் அம்பலவாணர் (பதிப்பாசிரியர்). கொழும்பு 15: செல்லம் அம்பலவாணர், 478/28, அளுத்மாவத்தை வீதி, 1வது பதிப்பு, 2024. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
108 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-98795-1-5.
ஒலித் தொகுப்புகளுடன் கூடிய திருமுறைப் பாடல்களின் தொகுப்பு இது. பயிற்சிநெறியில் கற்றவற்றில் எளிமையான பாடல்களின் வகைமாதிரியை (Sample) எடுத்து பண்ணுக்கு ஒரு பாடலாகவும், ஆலயங்களில் முக்கிய நிகழ்வுகளில் ஓதும் பாடல்களாகவும் தொகுத்து, மூலப் பண் அமைப்பில் சிறிதும் மாறாது பண்ணிசை ஆசிரியப் பெருந்தகைகளின் குரலிசையிலேயே பாடல்களின் ஒலிவடிவங்கள் இந்நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. பிரபல்யமான பண்ணிசை ஆசிரியர்களான தமிழ்நாடு-அண்ணாமலைப் பல்கலைக்கழக தேவார உதவிப் பேராசிரியர் திருமுறைக் கலாநிதி, முனைவர் திருஞான. பாலச்சந்திர ஓதுவா மூர்த்திகள், தமிழ்நாடு-சிதம்பரம், தேவார இசைக் கலைமணி முனைவர் சிவகௌரி கிரீஷ்குமார் ஆகியோரின் குரல்வள உதவியுடன் இந்நூலாக்கம் இடம்பெற்றுள்ளது. திருமுறைகள் ஓர் அறிமுகம், மூவர் தேவாரப் பதிகங்களில் பண்ணுக்கொரு பாடல், விசேட பதிகங்கள், உற்சவகாலத்தின்போது விசேடமாகப் பாடப்படுவன (கொடியேற்றம், தீர்த்தோற்சவம், திருவூஞ்சல்), நால்வர் சிறப்புப் பதிகங்கள் (முதற்பதிகம்-ஆட்கொள்ளப்பட்ட பதிகம், நிறைவுப் பதிகம்- முத்தியடைந்த பதிகம், முழுப்பதிகமும் பாடிய பலனைப்பெற ஓதவேண்டிய பதிகம்), பாடல்பெற்ற இலங்கைத் திருத்தல திருப்பதிகங்கள் (திருக்கோணேச்சரம், திருக்கேதீச்சரம்), வாழ்த்து ஆகிய ஏழு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. மறவன்புலோ செல்லம் அம்பலவாணர், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பண்ணிசை உயர்கல்விச் சான்றிதழ் கற்கைநெறி இணையவழி பயிற்சிநெறி சமய விவகாரங்களுக்கான செயலாளராக, கொழும்பு விவேகானந்த சபையில் பணியாற்றுகின்றார்.