சே.ராமானுஜம் (மூலம்), சண்முகசர்மா ஜெயப்பிரகாஷ் (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 2வது பதிப்பு, 2023, 1வது பதிப்பு, 1994. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
xi, 313 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 1750., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-709-7.
அரங்கியல் துறையில் காட்சியமைப்பு முதல் ஒளியமைப்பு ஈறாக உள்ள கூறுகள் புறத்தளங்களாகவும், நடிப்புக்கலையின் உள்ளீடான உடல், குரல், சித்திரப் படிமங்கள், நகர்வுகள், சைகைகள், செய்கைகள் ஆகிய தளவீச்சுகள், அகத்தளங்களாகவும் நிலவுகின்றன. இத்தகைய அகத்தளவீச்சுக்களைப் புறத்தளப் பரிமாணங்களோடு பிணைத்து ஆக்கம் தருவதே நாடகப் படைப்பாக்கமாகும். இந்நிலையில் ’நாடகப் படைப்பாக்கம்’ என்னும் தலைப்பில் இரு பகுதிகளாகத் திட்டமிடப்பட்டு அகத்தள வீச்சுக்கள் அடங்கிய முதற்பகுதியை ‘அடித்தளங்கள்’ எனும் நூலாகவும், புறத்தளங்களோடு அவை பின்னிப் பிணையும் ஆக்கப் போக்குகளைப் ‘படித்தளங்கள்’ என்னும் நூலாகவும் வெளியிடும் முயற்சியில் ‘அடித்தளங்கள்’ தற்போது நூல்வடிவம் பெற்றுள்ளது. இந்நூல் தலைமருங்கு, தளம், காலம், உடல், காட்சிப் படிமங்கள், நகர்வுகள், சைகைகள், செயல்கள், சங்கமம் ஆகிய ஒன்பது இயல்களில் எழுதப்பட்டுள்ளது. தலைமருங்கு என்னும் நுழைவாயிலில் நாடகக் கலையின் தனித்தன்மையும், பிற கலைகளோடு உள்ள அதன் தொடர்புப் பாங்கும் விளக்கிக் காட்டப்பட்டுள்ளன. அடித்தளங்களின் உட்கூறுகளான தளம், காலம், உடல், காட்சிப் படிமங்கள், நகர்வுகள், சைகைகள், செய்கைகள் ஆகியவை தனித்தனி இயல்களில் பேசப்பட்டு அவற்றின் ஆழமும், அகலமும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. சங்கமம் என்னும் கடைசி இயல் நாடக ஆக்கம், நடிப்புக் கலை, காட்சியமைப்பு முதலிய கலைத் தனிமங்களின் நிலைகள் நாடக இயக்கத்தின் பாகமாக அமைந்துள்ள தன்மைகளைக் காட்டி நிற்கின்றது. நூலாசிரியர் சே.இராமானுஜம் (1935-2015) தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நாடகத்துறையின் தலைவராகவும், பேராசிரியராகவும் விளங்கியவர். புது டில்லியிலுள்ள தேசிய நாடகப் பள்ளியில் பயிற்சி பெற்ற இவர் தமிழ், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுபது நாடகங்களுக்கு மேல் இயக்கியவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71486).