எம்.ஏ.எம்.ஜரீத். நிந்தவூர்: முஹம்மது அமீர் முஹம்மட் ஜரீத், கல்முனை/அல் அஷ்றக் தேசிய பாடசாலை, 1வது பதிப்பு, 2017. (நிந்தவூர்: ரெயின்போ பிரிண்ட்).
vi, 65 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-38760-0-3.
புனைகதைகள் மூலம் எதிர்கால விஞ்ஞானத்தின் வளர்ச்சி, மாற்றங்கள் என்பவற்றை, குறிப்பாக செய்மதி தொடர்பான சித்தாந்தங்களை ஆர்தர் சீ கிளார்க் என்ற எழுத்தாளர், தனது விஞ்ஞான கற்பனை நாவல்களில் வழியாக எதிர்வு கூறிவந்தார். ‘பூமியிலிருந்து பார்க்கும் பொழுது வானில் ஒரே இடத்தில் இருக்குமாறு செய்மதி (செயற்கைக் கோள்) ஒன்றினை அமைத்து உலகளாவிய பரப்பில் தொலைத்தொடர்புக் கருவிகளைப் பயன்படுத்தலாம்’ என்ற புகழ்பெற்ற அறிவியல் கருத்தை 1945இல் முன்வைத்தவர் இவர். எனவே உலகளாவிய அறிவியலின் வளர்ச்சி, எழுச்சி இன்று வேகமாக முன்னேறுகிறது என்றால் சிறந்த கற்பனைத் திறனுடைய ஆய்வுடன் கூடிய எதிர்வுகூறல்கள், புனைகதைகள் உருவாக்கப்படுதல் முக்கியத்துவம் பெறுகின்றது. அந்த வகையில் இலங்கையின் பாடசாலை மாணவனான எம்.ஏ.எம்.ஜரீத் தனது 14 வயதினிலேயே கற்பனைகள் கலந்த ஒரு எதிர்பார்ப்புடன் கூடிய ‘ஏலியன்சின்அபாயகரமான அதிசயத்தீவு’ என்ற நூலை வெளியிட்டு தன்னை இனம்காட்டியிருந்தார். இலங்கை உயர் தொழில்நுட்பவில் கல்வி நிலையத்தின் சம்மாந்துறை கற்கை நிலையத்தின் ஆங்கில உயர் தேசிய டிப்ளோமா கல்வியையும் மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி கலைமாணிப் பட்டப் படிப்பையும் தொடரும் மாணவரான இவர், தற்போது ஆழ்கடல், விண்வெளி, விண்கலம், நீர்மூழ்கி போன்றவற்றை பேசுபொருளாக்கி, இவற்றுள் மறைந்து கிடக்கும் மகிமையை இந்த உலகின் எதிர்காலத்துக்கு பயன்படும் வகையில் ஆராய்ச்சிகளும் கண்டுபிடிப்புகளும் அமைய வேண்டும் என்ற அவாவினால் உந்தப்பட்டு இந்நூலை எழுதியுள்ளார். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 93450).