சிட்னி மாகஸ் டயஸ் (சிங்கள மூலம்), திக்குவல்லை கமால் (தமிழாக்கம்). ஆனமடுவ: தோதென்ன வெளியீடு, உஸ்வௌ வீதி, 1வது பதிப்பு, 2011. (கணேமுல்ல: ஜயன்ட் பிரின்ட் கிராப்பிக்ஸ், 52, A/1, கலஹிடியாவ).
24 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 23.5×18 சமீ., ISBN: 978-955-1848-50-7.
சிறுவர்களுக்கான மொழிபெயர்ப்புக் கதை. பாடசாலையிலிருந்து சகுனியும் விக்சித்தவும் வீடு திரும்பும் போது அம்மா வேலை முடிந்து வீடு திரும்பியிருக்கவில்லை. சிரியாவதி ஆச்சியின் பராமரிப்பில் தான் வழமையாக அம்மா வரும்வரையில் இருவரும் இருப்பார்கள். ஆச்சியுடன் பகல் தூக்கம் கொள்ளும் வேளையில் பக்கத்து வீட்டிலிருந்து பூனையினதும் அது ஈன்றிருந்த குட்டிகளினதும் சத்தம் இவர்களுக்குக் கேட்கிறது. பூனை ஏன் கத்துகின்றது என்று அறிய ஆச்சிக்குத் தெரியாமல், பக்கத்து வீட்டுக்குச் செல்கிறார்கள். அங்கு பூனைக்குட்டிகள் பசியால் துடித்துக்கொண்டிருந்தன. இருவரும் வீடு திரும்பி குசினியிலிருந்து பாலை எடுத்துச் சென்று பூனைக்குட்டிகளைப் பராமரித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த வேளை வீட்டில் தூக்கம் கலைந்த ஆச்சி பிள்ளைகளை அருகில் காணாமல் பதட்டத்துடன் அவர்களைத் தேடுகிறார். அதேவேளை ஆச்சியின் குரல் கேட்டு அவசரமாக பக்கத்து வீட்டிலிருந்து முள் வேலியினூடாக தன் வளவுக்குள் நூழைய முனைந்த விக்சித்தவின் உடைகள் கிழிகின்றன. முதுகில் கம்பி கிழித்து இரத்தமும் வருகின்றது. குசினியிலிருந்து எடுத்த பாலை திரும்ப வைக்க குசினிக்குள் போன சகுனியின் கையிலிருந்த பால் போத்தில் கீழே விழுந்து அதுவும் உடைந்து சிதறுகின்றது. இந்த களபரத்திலிருந்து விடுபடமுன்னரே அம்மாவும் வேலையால் வந்து விடுகிறார். மூவரது நிலையை கண்டு தாய் கோபப்படுவதும், பின்னர் பிள்ளைகளை ஆறுதல் படுத்துவதுமாக இக்கதை நகர்கின்றது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 83869).