அ.சே.சுந்தரராஜன் (மூலம்), ஸ்ரீ பிரசாந்தன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, புதுக்கிய மீள்பதிப்பு, 2024, 1வது பதிப்பு, 1953. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
xviii, 146 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 750., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-6164-17-1.
காப்பியத் திலகமெனப் புகழ்பெற்றுள்ள கம்பராமாயணத்தின் கதைச் சுருக்கத்தை கதைத் தொடர்பு அறுபடாமலும் சுவை குன்றாமலும் பொது வாசகர்களுக்கு உரைநடையில் வழங்கும் நூலே இராமகாதையாகும். இது காண்டப் பகுப்பு, படலப் பிரிப்பு என்பவற்றைப் பேணாமல், இராமனது பிறப்பிலிருந்து அவனது முடிபுனைவு வரை கூறிநிற்கின்றது. ‘நாடும் நகரமும்’ என்பதில் தொடங்கி ‘இராமபிரான் முடிபுனைவு செய்யுள்களின் பொருள்’ என்பது வரையிலான 45 உப தலைப்புகளாலான இந்நூலில் புகழ்பெற்ற கம்பராமாயணச் செய்யுள்கள் சிலவும் எடுத்தாளப்பெற்றுள்ளன. அவற்றின் விளக்கங்கள் நூலின் நிறைவிலே தரப்பெற்றுள்ளன. 1953இல் முதற்பதிப்பாக மூல ஆசிரியரால் வெளியிடப்பட்ட இந்நூல் ஏராளமான மீள்பதிப்புகளை இதுவரை கண்டுள்ளது. ஸ்ரீ பிரசாந்தனின் இப்பதிப்பு மாணவர் நலன் கருதி பொருத்தமான புதிய சித்திரங்களுடனும் சிற்சில இற்றைப்படுத்தல்களுடனும்; வெளியிடப்பட்டுள்ளது. மூலநூலில் ‘தயரதன்’ (தசரதன்), ‘இராவணி’ (இந்திரசித்தன்), ‘கலுழன்’ (கருடன்) ஆகிய பெயர்கள் தற்கால மாணவரின் புரிதலுக்கும் இலகு வாசிப்பிற்குமேற்ப அடைப்புக்குறிக்குள் உள்ளவாறு பெயர் மாற்றப்பட்டுள்ளன. மூலநூலாசிரியர் அ.சே.சுந்தரராஜன், அறிஞர் சு.நடேசபிள்ளையின் அழைப்பின்பேரில், தமிழகத்திலிருந்து யாழ்ப்பாணம் வந்து திருநெல்வேலி பரமேஸ்வராக் கல்லூரி, சுன்னாகம் இராமநாதன் மகளிர் கல்லூரி, இராமநாதன் ஆசிரியர் கலாசாலை ஆகிய நிறுவனங்களில் ஆசிரியப் பணியாற்றிய தமிழறிஞர்.