அகில் (இயற்பெயர்: அகிலேஸ்வரன் சாம்பசிவம்). கனடா: இலக்கிய வெளி, 607-550, Scarborough Golf Club Road, Scarborough, Ontario M1G 1H6, 1வது பதிப்பு, ஜனவரி-ஜுன் 2024. (தமிழ்நாடு: அச்சக விபரம் தரப்படவில்லை).
94 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 28×21 சமீ., ISSN: 2564-2421.
இலக்கிய வெளி சஞ்சிகையின் இதழ் 6, ‘வ.ஐ.ச.ஜெயபாலன் சிறப்பிதழாக’ வெளிவந்துள்ளது. இவ்விதழில் புலம்பெயர்ந்தோர் இலக்கியக் கூறுகளும் வ.ஐ.ச. ஜெயபாலன் கவிதைகளும் (இரா.ஸ்ரீவித்யா), வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள்: ஈழ இலக்கியத்தின் நாடோடிக் குரல் (பா.இரவிக்குமார்), ஈழத்து இலக்கியப் புலத்தில் வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள் (சி.ரமேஷ்), வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள்: ஒடுக்குமுறைக்கு எதிரான குரல் (பாஸ்கரன் சுமன்), தன்னோடு தான் பேசுதல்: ஜெயபாலனின் ‘சூரியனோடு பேசுதல்’ குறித்து (க.பஞ்சாங்கம்), வ.ஐ.ச.ஜெயபாலனின் புலம்பெயர் கவிதைகள்: ஓர் ஆய்வுப் பார்வை (கே.சிந்துஜா), வ.ஐ.ச.: கவிமுகமும் திரைமுகமும் (இராகவன்) ஆகிய சிறப்பு ஆக்கங்கள், வழமையான மற்றைய இலக்கியப் பதிவுகளுடன் மேலதிகமாக இடம்பெற்றுள்ளன. வ.ஐ.ச. ஜெயபாலன் 13.12.1944இல் யாழ்ப்பாணம் உடுவில் கிராமத்தில் பிறந்தவர். 1970களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கற்றவர். படிக்கும் காலத்தில் மாணவர்கள் இயக்கத்தில் முன்னணி பொறுப்பு வகித்தார். தற்பொழுது நோர்வே நாட்டின் தலைநகரான ஒஸ்லோவிலும் தமிழகத்திலும் வசித்துவருகின்றார். ஈழத்திலும் புகலிடத்திலும் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் சமூகவியல் ஆய்வுகளிலும் ஈடுபட்டுள்ளார். இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஆடுகளம் (2011) திரைப்படத்தில் முதன் முதலில் நடித்தார். அதில் நடித்தமைக்காக தேசிய விருதும் பெற்றிருந்தார்.