17489 ஜீவநதி: ஐப்பசி 2023: அன்பு ஜவஹர்ஷா சிறப்பிதழ்.

க.பரணீதரன் (பிரதம ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஐப்பசி 2023. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 10, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).

32 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 29.5×20 சமீ.

‘ஜீவநதி’ கலை இலக்கிய மாத சஞ்சிகையின் 216ஆவது இதழாக 10.10.2023இல் வெளிவந்த அன்பு ஜவஹர்ஷா சிறப்பிதழில், அன்பு ஜவஹர்ஷா ஒரு தனி மனித நிறுவனம் (திக்குவல்லை கமால்), அனுராதபுரத்தின் அடையாளம் என்கின்றேன் அன்பு ஜவஹர்ஷாவை (கெக்கிறாவ ஸ{லைஹா), அன்பு ஜவஹர்ஷாவின் கல்விப் பணிகள் (எம்.ஏ.எம்.எம்.ஜவாத் மரைக்கார்), அனுராதபுர மாவட்ட இலக்கிய முதுசொம் கலாபூஷணம் அன்பு ஜவஹர்ஷா (எல். வஸீம் அக்ரம்), காவிகளும் ஒட்டுண்ணிகளும் -கவிதை (அன்பு ஜவஹர்ஷா), அன்பு ஜவஹர்ஷா எனும் இலக்கிய ஏ(தோ)ணி (நாச்சியாதீவு பர்வீன்), விதியாகும் விதி-கவிதை (அன்பு ஜவஹர்ஷா), நேர்காணல்- அன்பு ஜவஹர்ஷா (பரணீதரன்), வழிகாட்டியாக வாழும் அன்பு ஜவஹர்ஷா (வதிரி சி.ரவீந்திரன்), அன்பு ஜவஹர்ஷா என்னும் ஆலமரம் (பேனா மனோகரன்), காவிகளும் ஒட்டுண்ணிகளும் (மு.பஷீர்), பஹதூர்ஷா பள்ளியெழுச்சி -கவிதைகள் (அல் அஸூமத்), அன்பு எனும் ஆளுமை-கவிதை (பாத்திமா நிஸ்ரின்), ஆகிய படைப்பாக்கங்கள் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன. இறுதிப் பக்கத்தில் மட்டக்களப்பிலிருந்து கே.எம்.எம்.ஷா (பித்தன்) அவர்களிடமிருந்து அன்பு ஜவஹர்ஷா அவர்களுக்கு 01.04.1987 அன்று எழுதப்பட்ட கடிதம் ஒன்றும் இடம்பெற்றிருக்கின்றது. அன்பு ஜவஹர்ஷாவின் தந்தை அன்புதாசன் அவர்கள் தன் மகனுக்கு ஜவஹர்ஷா என்ற பெயரை எவ்வாறு தேர்வுசெய்தார் என்பதை அக்கடித் விளக்குகின்றது. அனுராதபுர மாவட்டத்தில் தமிழ் இலக்கியம் செழிக்க முக்கிய பங்காற்றியவர் அன்பு ஜவஹர்ஷா. கல்வியியலாளராக, ஆய்வாளராக, கவிஞராக, இலக்கியச் செயற்பாட்டாளராக, பாடசாலை அதிபராக, ஆசிரியராக, சமூக செயற்பாட்டாளராக, கல்வி ஆலோசகராக எனப் பன்முகம் கொண்டவர் இவர். இவரது ’காவிகளும் ஒட்டுண்ணிகளும்’ என்ற கவிதைத் தொகுதியும், ‘அனுராதபுரத்தின் முதுசொம்’ என்ற ஆவணத் தொகுப்பும் பிரபல்யமானவை.

ஏனைய பதிவுகள்