க.பரணீதரன் (பிரதம ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, பெப்ரவரி 2025. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 10, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).
32 பக்கம், ஒளிப்படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 100., அளவு: 29×20.5 சமீ.
‘ஜீவநதி’ கலை இலக்கிய மாத சஞ்சிகையின் 253ஆவது ஆளுமைச் சிறப்பிதழாக 05.02.2025இல் இவ்விதழ் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மருத்துவம்-இலக்கியம்-அறிவியல் துறைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டியங்கும் வைத்திய கலாநிதி எம்.கே. முருகானந்தன் அவர்கள் பற்றியும் அவரது படைப்புகள் பற்றியும் பல்வேறு தமிழ் இலக்கியவாதிகளால் எழுதப்பட்ட ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. ஈழத்தில் இலக்கியப் பரப்பில் இரண்டு முருகானந்தன்கள் இருக்கிறார்கள். இருவருமே வைத்தியர்கள். பின்னவர் ச.முருகானந்தன், மூத்தவர் எம்.கே.முருகானந்தன். இருவருமே ஈழத்தின் வடமராட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. டொக்டர் எம்.கே.முருகானந்தன் அவர்கள் மருத்துவக் கட்டுரைகள் மட்டுமன்றி, சிறுகதைகள், விமர்சனப் பகிர்வுகள் என்று தொடர்ந்து எழுதி வருபவர். இச்சிறப்பிதழில் க.பரணீதரன், கோகிலா மகேந்திரன், வசந்தி தயாபரன், புலோலியூர் ஆ.இரத்தினவேலோன், புலோலியூர் வேல் நந்தகுமார், கே.எம்.செல்வதாஸ், ஏ.எஸ்.சற்குணராஜா, இ.சு.முரளிதரன், த.கலாமணி ஆகியோர் வைத்திய கலாநிதி எம்.கே. முருகானந்தன் பற்றியும், அவரது நூல்களான உறங்கும் உண்மைகள், மறந்து போகாத சில, டாக்குத்தரின் தொணதொணப்பு, மலைப்பூட்டும் மருத்துவ அறிவியலை அறிந்துகொள்வோம், வாசிப்பின் நினைந்தூறல், நகரும் படிமங்கள், மருந்தெனல் நோய் இனி வராதிருக்க ஆகிய நூல்கள் பற்றியும் எழுதிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.