பாரதிபாலன் (இயற்பெயர்: குமாரசாமி ஜெயக்குமார்). டென்மார்க்: கவிவேழம் பாரதிபாலன், Bjergmarken 7st,th, 4300, Holbaek, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2010. (சென்னை 600073: கிருபா பதிப்பகம், 1, ஐந்தாவது குறுக்குத் தெரு, தனலட்சுமி நகர், சேலையூர்).
196 பக்கம், விலை: இந்திய ரூபா 120., அளவு: 20×14.5 சமீ.
இலங்கையில் நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்ட பாரதிபாலன் தற்போது புலம்பெயர்ந்து டென்மார்க்கில் வாழ்ந்துவருகிறார். சென்னை பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் வெ.தெ.மாணிக்கனார் அவர்களால் ‘கவிவேழம்’ எனப் பாராட்டி கௌரவிக்கப்பட்டவர். சிறுகதை, காவியம், நாவல், நாடகம், ஆன்மீகம் எனப் பன்முகம் கொண்ட இவர் பங்கேற்ற கவியரங்குகளிலும், கலை இலக்கிய மேடைகளிலும் நிகழ்த்தப்பெற்ற இவரது அளிக்கைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. ‘மேற்குலக அரங்க நிகழ்வுகள்” என்ற பிரிவின் கீழ், கை நீட்டும் கடல் அலைகள் (கவிதை-ஜேர்மனி, பெர்லின் அரங்கு), பொறுக்காத நெஞ்சொன்று (கவிதை-டென்மார்க், கேர்ணிங் நகர்), ஏங்காத நாள் என்று? (கவிதை-டென்மார்க், கேர்ணிங் நகர்), எங்கு வாழ்ந்தாலும் தான் என்ன (கவிதை-டென்மார்க், வைலை; நகர்), இரவல் நாட்டுக் கூனலும் 20 ஆண்டு கால நிமிர்வும் (கவிதை-டென்மார்க், கொல்பேக் நகர்), தமிழ்ப் பத்திரிகை உலகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் (ஆய்வுரை-டென்மார்க், வைன் நகர்) ஆகிய ஆறு படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. ‘தாயக அரங்க நிகழ்வுகள்’ என்ற பிரிவின் கீழ், கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி, திருக்கோணமலை இந்துக் கல்லூரி, திருக்கோணமலை விக்கினேஸ்வரா கல்லூரி, திருக்கோணமலை புனித சவேரியார் பாடசாலை ஆகிய பாடசாலை மேடைகளில் பாடிய கவிதைகளும், குறுங்காவியம் ஒன்றும் இடம்பெற்றுள்ளன. மேலும், ஐரோப்பிய நாடக அரங்கினிலே (கவிதை இசை தாகம்), கனடா வானொலி அரங்கமும் தாயக வன்னி நிகழ்வும், படைப்பாளி உங்களிடம் என்ற தலைப்பிலான ஆக்கங்களும் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளன.