காசி. ஆனந்தன் (இயற்பெயர்: காத்தமுத்து சிவானந்தன்). மட்டக்களப்பு: காசி ஆனந்தன் கவிதைத் தொகுப்பு வெளியீட்டுக் குழு, 1வது பதிப்பு, 1961. (மட்டக்களப்பு: பாத்திமா அச்சகம்).
(4), 12 பக்கம், விலை: 30 சதம், அளவு: 20×14 சமீ.
இந்நூலில் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் பத்து உணர்ச்சிக் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. விடுதலை கொண்டு வருவோம்!, புலியடித்த தமிழகம்!, என் சிரித்தாய் வான்முகிலே?, அன்னையின் புகழ் பாடு தோழி!, ஏழ்மை ஏனடா?, சாவும் ஒரு வாழ்வே!, விடுதலை கிடையாதோ? விடுதலைக்கு விலை தருவோம்!, தமிழை மறப்பேனா?, தமிழ் உணர்வு ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. காசி ஆனந்தன் மட்டக்களப்பு மத்திய கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே சிங்கள ஆதிக்க வெறியர்களினதும் அரசினதும் அடக்குமுறைகள் மற்றும் ஆட்சி நடைமுறைகளுக்கு எதிராகப் போராட்டம் செய்து சிறை சென்றவர். பின்னர் தமிழ்நாடு சென்று சென்னை பச்சையப்பா கல்லூரியில் தமிழிலும் தமிழிலக்கியத்திலும் உயர் கல்வி கற்கும் வேளையில் அங்கும் பெரியார் ஈ. வே. ராமசாமியுடன் இணைந்து செயற்பட்டார். பின்னர் 1963 இல் இலங்கை திரும்பி இலங்கை அரச மொழித்திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராக சில காலம் பணியாற்றினார். சிங்களம் மட்டும் சட்டத்தை எதிர்த்து, 1972 இன் பின்னர் அரச பணியைத் துறந்து, ஈழத்தமிழர்களின் சுதந்திர எழுச்சிக்குத் துணை நின்றார். இவர் இலங்கையில் வாழ்ந்த வேளையில் அங்கிருந்த ஐந்து சிறைகளில் சுமார் ஐந்து வருடங்கள் சிறைவாசம் அனுபவித்தவர். தெருப்புலவர், தமிழன் கனவு, காசி ஆனந்தன் கவிதைகள், சுவர்க்கவிகள் உட்படப் பல கவிதைத் தொகுப்புகளை எமக்கு வழங்கியுள்ளார். காசி ஆனந்தன் கதைகள், நறுக்குகள் ஆகியன இவரது கவிதையல்லாத பிற நூல்களாகும். இன்றும் தொடர்ந்து எழுதிவரும் இவர் தமிழீழத்தின் அதிஉயர் விருதான ‘மாமனிதர் விருது’ வழங்கிச் சிறப்பிக்கப்பட்டவர். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 114306).