நீலாவணன் (இயற்பெயர்: கேசகப்பிள்ளை சின்னத்துரை). கல்முனை: திருமதி கே.சின்னத்துரை, வெளாண்மை, பெரிய நீலாவணை, 1வது பதிப்பு, மே 1976. (கொழும்பு 13: ரெயின்போ பிரின்டர்ஸ், 231, அதிருப்பள்ளி தெரு).
134 பக்கம், விலை: ரூபா 7.00, அளவு: 18×12 சமீ.
கவிஞர் நீலாவணன் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணையில் 31.05.1931 அன்று வைத்தியர் கேசகப்பிள்ளை – தங்கம்மா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். தமது ஆரம்பக் கல்வியை நீலாவணையின் தென்பகுதியில் அமைந்துள்ள மருதமுனை என்னும் கிராமத்தில் பயின்றார். அங்கு புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன் ஹாஜியாரிடம் தமிழ் பயின்றார். தமது பள்ளிக் கல்வி முடிந்தவுடன் தமிழ் ஆசிரியராகப் பயிற்சி பெற்றார். பின்னர் பல்வேறு பாடசாலைகளிலும் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். இவர் 1948ஆம் ஆண்டு முதல் எழுதத் தொடங்கினார். 1952ஆம் ஆண்டு இவரது ‘பிராயச்சித்தம்’ என்னும் சிறுகதை ‘சுதந்திரன்’ இதழில் முதன் முதலாக வெளிவந்தது. 1953இல் ‘ஓடிவருவதென்னேரமோ?’ என்ற கவிதையின் மூலம் கவிஞராக அறிமுகமானவர். (இவரது இறுதிக்கவிதை ‘பொய்மை பொசுங்கிற்று’ என்பதாகும்). கல்முனை எழுத்தாளர் சங்கத்தின் தாபகரான இவர் அங்கு தலைவராகவும் பணியாற்றி இலக்கியப் பணியாற்றிவந்தவர். 11.01.1975இல் மறையும் வரை ஏராளமான கவிதைகள், உருவகக் கதைகள், சிறுகதைகள், விருத்தாந்த சித்திரம், நாடகம் என்று எழுதிக் குவித்தவர். இத்தொகுதியில் நீலாவணன் மறைவதற்கு முன்னர் நூலாக வெளியிடத் தொகுத்து வைத்திருந்த கவிதைகள் இடம்பெற்றுள்ளன. பெரும்பாலானவை 1955க்குப் பின்னர் 1972வரை அவர் எழுதியவை. இவற்றில் தேர்ந்த 55 தனிக் கவிதைகளும் ‘வழி’ என்ற நெடுங்கவிதையும் இடம்பெற்றுள்ளன. இந்நூலின் பின்னைய பதிப்பொன்று தமிழகத்திலிருந்து ‘வழி’ என்ற தலைப்புடன் மித்ர வெளியீடாக நவம்பர் 2002இல் வெளியிடப்பட்டுள்ளது.