நிலாந்தன். யாழ்ப்பாணம்: மானுடம் நிறுவனம், 1வது பதிப்பு, மே 2023. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).
(4), 36 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ., ISBN: 978-624-94650-0-8.
நிலாந்தனின் 25 கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பு. ஊழிக்காலத்தில் அல்லது ஒரு யுகமுடிவில் ஒன்றில் பதுங்கு குழியை அல்லது பிணக்குழியை அல்லது மலக்குழியை வெட்டிக் கொண்டிருந்த மக்கள் எதைச் சமைத்தார்கள்? எதைச் சாப்பிட்டார்கள்? எதைக் குடித்தார்கள்? அல்லது சாப்பிடவும் குடிக்கவும் அவர்களுக்கு நேரம் இருந்ததா? அல்லது சாப்பிடவும் குடிக்கவும் அவர்களுக்கு பசி தாகம் இருந்ததா? உணவு ஓர் ஆயுதமாக பயன்படுத்தப்பட்ட போர்க்களம் அதுவென்று தமிழ் சிவில் சமூக அமையம் தனது அறிக்கை ஒன்றில் கூறியது. அந்நாட்களில் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் சமைக்க வழியில்லாதவர்களுக்கு கஞ்சி வழங்கியது. கஞ்சிக் கொட்டில்கள் ஆங்காங்கே காணப்பட்டன. உணவு ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு யுத்தத்தை நினைவுகூர உணவையே ஒரு நினைவுப் பொருளாக உபயோகிக்கலாம் என்று கூறிய தமிழ் சிவில் சமூக அமையம், முள்ளிவாய்க்கால் கஞ்சியை ஒரு நினைவுப் பொருளாக அறிமுகப்படுத்தியது. அது ஒரு யுக முடிவு. அதன்பின் எழுதிய கவிதைகளில் ஒரு பகுதியை தொகுத்து 2014இல் எழுநா வெளியீடாக ‘யுகபுராணம்’ என்ற பெயரில் வெளியிட்டேன். ஏனைய கவிதைகளை கிட்டத்தட்ட 10 ஆண்டுகளின் பின் பெருந்தொற்று நோய் உலகத்தைக் கவ்விப் பிடித்த போது, பத்து ஆண்டுகளாக ஊறிக் கிடந்தவற்றை மீளச் செதுக்கத் தேவையான மனோ நிலையும் கால அவகாசமும் கிடைத்தன. ஒரு யுக முடிவும் பெருந் தொற்று நோயும் ஒன்றல்ல. இறுதிக்கட்டப் போர் ஈழத் தமிழர்களுக்கு மட்டுமான அச்சுறுத்தல். ஆனால் பெருந்தொற்று நோய் உலகம் முழுவதுமான அச்சுறுத்தல். எனினும், இரண்டுமே வாழ்வின் நிச்சயமின்மைகளை, மனிதனின் இயலாமைகளை உணர்த்திய காலகட்டங்கள். அதனால் பத்தாண்டுகளாக கிடந்து ஊறிய கவிதைகளை எழுதி முடித்தேன். ஒரு சிறிய மக்கள் கூட்டத்தின் அழிவின் பின் தோன்றிய கவிதைகளும் பரிசோதனைகளும், முழு மனித குலத்துக்குமான அழிவுகாலம் ஒன்றில் எழுதி முடிக்கப்பட்டன. இத்தொகுப்பில் இறுதிக்கட்டப் போரின் பின்னரான கவிதைகளும் ஒரு நூற்றாண்டின் பின் உலகைத் தாக்கிய பெருந்தொற்று நோய் பற்றிய கவிதைகள் சிலவும் உண்டு. பெருந்தொற்று நோய்க்குப் பின்னரான கவிதைகளும் உண்டு. 2009 இலிருந்து தொடர்ச்சியாக வந்த ஆண்டுகளில் எழுதப்பட்டவை இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. (நிலாந்தன், முன்னுரையில்).
 
				