தில்லை. யாழ்ப்பாணம்: தாயதி வெளியீடு, சமூக செயலூக்கத்துக்கான முன்னோடி, 1வது பதிப்பு, ஜனவரி 2021. (அச்சக விபரம் தரப்படவில்லை).
88 பக்கம், விலை: இந்திய ரூபா 90.00, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-9501-161-2.
ஈழப்போரின் இறுதிக் காலங்களில் புலம்பெயர்ந்து சுவிட்சர்லாந்தில் அங்கீகரிக்கப்பட்ட அகதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் பெண் கவிஞர் தில்லை வெளியிட்ட முதல் கவிதைத் தொகுப்பு இது. இந்த நூலில் உள்ள 48 வலிமிகுந்த உயிர்க் கவிதைகளையும், உறவுச் சிக்கல்களால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் உள்மனக் குமுறல்கள், குழந்தைப் பராயத்தில் ஊர்ப் பெரியவர்களாலும் , நெருங்கிய உறவினர்களாலும் துஸ்பிரயோகம் செய்யப் பட்ட ஒரு சிறுமியின் அவலக் குரல், பிறந்த மண், அதன் தனித்துவமான கலாச்சாரத்தின் மீதான பற்று, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களின் இயலாமையின் வெளிப்பாடு, புலம்பெயர்ந்து சென்று, முற்றிலும் அந்நியத்தன்மை கொண்ட ஐரோப்பிய நாடொன்றில் ஒரு மாறுபட்ட புதிய வாழ்க்கையை தொடங்குதல் என ஐந்து பிரிவுகளாக வகுக்கமுடிகின்றது. இந்தத் தொகுப்பில் சில கவிதைகள் காப்கா பாணியிலான உள்மனக் குமுறல்களின் வெளிப்படுத்தல்களாக உள்ளன. உண்மையில் ஓர் உளவியல் மருத்துவரிடம் ஆற்றுப்படுத்தல் தேடுவது மாதிரி, கதை, கவிதை போன்ற புனைவு இலக்கியங்களில் வெளிப்படுத்துவதற்கு ஒரு துணிச்சல் தேவைப்படுகின்றது. அது தில்லையிடம் தாராளமாக இருக்கிறது. கவிஞர் தில்லையின் இக்கவிதையாக்கத்தில் அவரின் பெரும் துயரங்களையும், இயலாமைகளையும், ஆண் திமிரின் உச்சங்களையும், கொடுமைகளை எதிர்த்து நிற்கும் கோபத்தின் தாண்டவத்தையும், அவருக்குள் இருக்கும் வாசம் மிகுந்த அன்பின், காதலின் ஏக்கங்களையும், தாயக மண் சார்ந்து, அந்த மக்கள் பட்ட பெரும் துன்பங்களையும் வலிகளையும் வேதனைகளையும் தரிசிக்கமுடிகின்றது.