குழந்தை ம.சண்முகலிங்கம். (மூலம்), நா.நவராஜ் (பதிப்பாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
52 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-6601-43-0.
யாழ்ப்பாணம் திருநெல்வேலியை பிறப்பிடமாகக் கொண்ட ம.சண்முகலிங்கம் (15.11.1931- 17.01.2025), குழந்தை ம.சண்முகலிங்கம் என எல்லோராலும் அறியப்படுபவர். ஈழத்தின் நாடக எழுத்தாளரும், நாடகப் பயிற்சியாளரும், நாடக நடிகரும், நாடக அரங்க கல்லூரியின் நிறுவனருமான இவர் ஈழத்து சிறுவர் நாடகத் தந்தை எனப் போற்றப்பட்டவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவரின் நாடகத்துறை ஈடுபாட்டின் காரணமாக வருகைதரு விரிவுரையாளராக நியமித்தது. 1950ஆம் ஆண்டு நாடகப் பயணத்தை ஆரம்பித்த சண்முகலிங்கம் 1951ஆம் ஆண்டு திருநெல்வேலி இந்துவாலிப சங்க நாடகமொன்றில் கிழவன் பாத்திரம் ஏற்று நடித்தார். 1957ஆம் ஆண்டு ‘அருமை நண்பன்’ என்னும் நாடகத்தை தானே எழுதித் தயாரித்தார். அந்த நாடகமே இங்கு மீளபதிப்பாகியுள்ளது. குழந்தை அவர்களின் ஆரம்ப எழுத்துருவான இது திராவிட முன்னேற்றக் கழகத்தின் வசனப் பாணியை- குறிப்பாக ‘பராசக்தி’ படத்தின் வசனங்களை ஒத்த வசனப் பாணியைக் கொண்டிருக்கின்றமையை இந்நாடகத்தின் நீதிமன்றக் காட்சியின் மூலம் உணரலாம். இன்றைய சூழலில் பிள்ளைகள் வழிதவறிப் போகும் போக்கு அதிகரித்துள்ள நிலையில் தனது பாடசாலைக் காலத்தில் தான் கண்டவற்றை மனத்துள் வைத்து 1958களில் இந்நாடகத்தை அவர் படைத்திருந்தார். அது இன்றைய வாழ்நிலையோடும் பொருந்திக் கிடக்கின்றது. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 417ஆவது நூலாக வெளிவந்துள்ளது. (இந்நூல் யாழ்;ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 307365).