மாவை நித்தியானந்தன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2023. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
vii, 40 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-6164-58-4.
மாவை நித்தியானந்தன் 1972 இல் எழுதிய முதல் நாடகம் இது. ஊரில் சிலர் கல்லொன்றைக் கண்டெடுக்கிறார்கள். அதைப் பிள்ளையார் எனப் பாவனை செய்கிறார்கள். விரைவில் அது அந்த ஊரில் சாதியத்தை நிலைநிறுத்தும் சின்னமாக மாறுகிறது. எப்படி நடந்தது? என்ன முடிவை இது காண்கிறது என்பதை இந்நாடகம் சுவாரஸ்யமாக வளர்த்துச் செல்கின்றது. சாதியத்தைப் பொறுத்தவரை இந்நாடகம் வரலாற்றைப் பிரதிபலிக்கும் ஒரு கலை வடிவமாகவும் அமையும். இந்த நாடகம் மதம் பற்றிய ஒரு விசாரணை அல்ல. மதத்தை வைத்து எவ்வாறு மூடநம்பிக்கைகள் பரப்பப்படுகின்றன என்பதையும் எவ்வாறு மக்களின் சமத்துவ சகவாழ்வு குலைக்கப்படுகின்றது என்பதையும் இந்நாடகம் எடுத்துச் சொல்கினறது. மாவை நித்தியானந்தன் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து இயங்கி வரும் நாடகாசிரியர். நெறியாளர். அடிமட்ட மக்களைச் சென்றடைந்த காத்திரமான பல நாடகங்களை உருவாக்கியவர். தமிழில் சிறப்பான சிறுவர் நாடகங்கள் பலவற்றைப் படைத்த முன்னணி நாடகாசிரியர்களில் ஒருவரான இவர் அங்கதச் சுலைவயை இலாவகமாகக் கையாள்பவர். ஆழமான நகைச்சுவையுடன் சேர்த்து பலம்வாய்ந்த செய்திகளைச் சமூகத்துக்கு வழங்குபவர். அவரது ‘திருவிழா’ என்னும் தெருவெளி நாடகம் 1980களில் ஞாயிறு படைப்பாளிகள் வட்டத்தினரால் இலங்கையின் வட பகுதியில் கிராமங்கள் தோறும் நிகழ்த்தி மிகுந்த வரவேற்பைப் பெற்றுக்கொண்டது.