குழந்தை ம.சண்முகலிங்கம் (மூலம்), நாகேந்திரம் நவராஜ் (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2022. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
vi, 71 பக்கம், விலை: ரூபா 800., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-6164-16-4.
அரசியலோடு சம்பந்தப்பட்டதான, குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களின் நாடகங்கள் எப்போதும் அந்த நேரத்தின் முக்கிய பிரச்சினைகள் சார்ந்தவைகளாகவே அமைந்துள்ளன. இந்த அடிப்படையில் ‘மனத்தவம்’ என்ற நாடகத்தின் மூல எழுத்துருவையும், பின்னைய திருத்தப்பட்ட பிரதிகளையும் இணைத்து நூலுரவாக்கியுள்ளனர். இந்த நாடகத்தைத் தரிசிக்கும் வேளை சில பின்புலக் குறிப்புகளை ஆசிரியரின் எழுத்தின் வழியாகவே விளக்குகையில் ‘முதலில் எனது மாணவர்களோடு சேர்ந்துதான் இந்த நாடகத்தை 1998ஆம் ஆண்டளவில் எழுதத் திட்டமிட்டேன். 1995 முதல் இராணுவக் கெடுபிடிகள் எம் மனங்களை வருத்தியது. தினமும் ‘இறங்கு’ என்ற இடத்தில் இறங்கியும், ‘ஏறு’ என்ற இடத்தில் ஏறியும் ‘உயர்த்து’ என்ற இடத்தில் உயர்த்தியும், ‘காட்டு’ என்ற இடத்தில் காட்டியும், ‘குந்து’ என்ற இடத்தில் குந்தியும் கூச்சம் போகத் தடவவிட்டும் வாழநேர்ந்த காலம் அது. எமது உடல் இதையெல்லாம் செய்யட்டும் எமது மனங்களை மட்டும் நாம் பாதுகாத்துக் கொள்வோம். அசோக வனத்தில் சிறையிருந்த சீதை ‘மனத்தவம்’ புரிந்தாள் என்றுதான் கம்பன் கூறுகின்றான். ‘மனத்தவம்’ இராமாயண சம்பவம் ஒன்றினை அடிப்படையாகக் கொண்டது. இது ஒரு உரைநடை நாடகம். பேசி நடிப்பதற்குரியது. வழமைபோலக் கருவையும் கருத்துக்களையும் வலியுறுத்துவதற்காகப் பாடல்கள் பல வரும். அவை இராமாயணப் பாடல்கள் அல்ல. வேறு இலக்கியப் பாடல்கள். எனவே, இந்த நாடகம் நான் விரும்பியதை எழுதுவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தது.’ என்று குறிப்பிடுகிறார். அக்காலகட்டத்தில் ஈழத்து அரங்க வரலாற்றில் போர்க்கால உளவியல் சார்ந்த அறிவு வளர்ச்சியடையவில்லை என்றே கூற வேண்டும். போர்க்கால உளவியல் நாடகங்கள் மக்கள் மத்தியில் பெருமளவில் அறியப்படாததாகவே இருந்துள்ளது. ஏனைய நாடக வகைகளை விட உளவியல் சார் நாடக எழுத்துருக்களே மக்களை ஆற்றுப்படுத்தும் வகையில் படைக்கப்படுகின்றன. ‘அன்னையிட்ட தீ’, ‘எந்தையும் தாயும்’ ஆகிய நாடக எழுத்துருக்களை ஆற்றுப்படுத்தும் நாடகங்கள் எனவும் கூறலாம். ஈழத்தில் போர்ச் சூழலில் வாழ்ந்து கொண்டே இத்தகைய உளவியல்சார் போர்க்கால நாடகங்களை உருவாக்கிய துணிச்சலும், பெருமையும் குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களையே சாரும். ஈழத்துத் தமிழ் நாடக அரங்க வராலாற்றில் முதன் முதலில் உளவியல் நாடகங்களையும், சிறுவர் நாடகங்களையும் எழுதிய பெருமை இவரையே சாரும். இவரது அனைத்து எழுத்துருக்களும் சிறப்பானவையாக விளங்குவதோடு அன்னையிட்ட தீ, எந்தையும் தாயும், மண்சுமந்த மேனியர் என்பன ஈழத்துத் தமிழர்களின், எண்பதுகளின் வரலாற்றுக்கான முக்கியமான கலைப் பதிவாகவும் வரலாற்றில் பதிவாகியுள்ளன. மண்சுமந்த மேனியர் (1985) முதல், எந்தையும் தாயும் (1992) வரை உள்ள நாடகங்கள் யாழ்ப்பாணத்தின் போர்க்கால வரலாற்றுக்கான அரங்கியற் பதிகைகளாகும். பலர் எடுத்துப்பேசத் தயங்கிய பல விடயங்களை குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள்; ஒளிவு மறைவின்றி எந்தையும் தாயும், அன்னையிட்ட தீ, மாதொரு பாகம்,வேள்வித்தீ, மண்சுமந்த மேனியர், நீ செய்த நாடகமே, நரகொடு சுவர்க்கம் போன்ற பல நாடகங்கள் மூலம் அலசியுள்ளார். அந்த வகையில் அன்னையிட்ட தீ, எந்தையும் தாயும் என்பன மிக முக்கியமான நாடகப் படைப்புகளாக உள்ளன. ம.சண்முகலிங்கம் அவர்கள் நாடக எழுத்துருக்களை எழுதும் போது தான் தனித்து நின்று எழுதாது ஏனையோருடன் கூடிக் கலந்துரையாடி சமூகத்திலுள்ள யதார்த்தப் பிரச்சினைகளையே நாடமாக்கினார். குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் உள மருத்துவர்களான தயா சோமசுந்தரம், சிவயோகன் ஆகியோருடன் கலந்துரையாடிய பின்னரே அன்னையிட்ட தீ, எந்தையும் தாயும், வேள்வித் தீ, ஆர் கொலோ சதுரர் போன்ற நாடகங்களை எழுதி அரங்கேற்றினார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71498).