கி.பவானந்தன்;. பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஜுலை 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).
44 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-90-0.
இன்னல்களுக்கு அன்றாடம் முகம்கொடுத்து வரும் அடிநிலை மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் எழுதப்பட்ட குறுங்கதைகள் இவை. அழிவுப் பாதை, வாழை கற்பிக்கும் பாடம், வேடம் கலைகிறது, தேர், எதிரி, காகமும் ஆடும், விழிப்பு, வைராக்கியம், பாதை, விடுதலை, இனம் காணும் பொழுது, புகை, சலுகை, குருவிப்போர், பொறி ஆகிய 15 தலைப்புகளில் எழுதப்பட்ட குட்டிக்கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. கி.பவானந்தன் 12.12.1947இல் வடமராட்சி-துன்னாலையில் பிறந்தவர். ஆரம்பக் கல்வியை துன்னாலை காசிநாதர் வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியையும் உயர்நிலைக் கல்வியையும் கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியிலும் பெற்றுக்கொண்டார். கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் தொழில்நுட்பத்துறையில் மேற்படிப்பை மேற்கொண்டார். தட்டச்சாளராகவும், எழுதுவினைஞராகவும், மேலதிக மாவட்டப் பதிவாளராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றபின் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தில் சிறிது காலம் பணியாற்றினார். மக்கள் எழுத்தாளர் கே.டானியலுடன் நெருக்கமான உறவுகொண்டிருந்த இவர் டானியலின் பல படைப்புகளை தட்டச்சு செய்து வழங்கியவருமாவார். இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 368ஆவது நூலாக வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 72269).