சஞ்சயன். சென்னை 600093: வேரல் புக்ஸ் வெளியீடு, 6, 2ஆவது தளம், காவேரி தெரு, சாலிகிராமம், 2வது பதிப்பு, ஓகஸ்ட் 2023. (சென்னை 600093: வேரல் புக்ஸ்).
122 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-81-96062- 01-9.
நினைவு மறந்த கதை சஞ்சயனின் அம்மா நினைவிழப்பிற்குள்ளானதன் பின் அவருக்கும் பிள்ளைகளுக்குமிடையிலான உறவு நிலையைப் பற்றிய அனுபவத்தைச் சொல்லும் கதைகள். இதைச் சஞ்சயன் தன்னுடைய முகப்புத்தகத்தில் அவ்வப்போது எழுதி வந்திருக்கிறார். முகநூல் பதிவை முதற் பதிப்பாகக் கருதி, நூலுருவில் வெளிவந்த பதிப்பினை 2ஆவது பதிப்பாகக் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தொலை தூரத்திலிருந்து கொண்டு அம்மாவுடன் பேசுவதற்குச் சிரமப்படும், தாம் யார் என்பதை அறிமுகப்படுத்தக் கஸ்ரப்படும் நிலையை-அவலத்தை இக்கதைகள் சொல்லுகின்றன. ஞாபக மறதியின் (Dementia) தாக்கத்தைச் சந்திப்பது எளிதல்ல. நினைவு மறதி வந்தால் தாம் யார், எதுவாக இருக்கிறோம் என்றே தெரியாது. நம்மைச் சுற்றியுள்ளவர்களும் உறவுகளும் தாங்கள் யார், தமக்கும் நமக்கும் என்ன உறவு என்பதைச் சொல்லவோ வெளிக்காட்டவோ முடியாமல் போகும். இங்கே தன்னுடைய மகன் யார் என்றே தாய்க்குத் தெரியவில்லை. அதைப் புரிய வைப்பதற்கு பிள்ளைகளாலும் முடியவில்லை. தன் வாழ்நாளெல்லாம் ஆயிரமாயிரம் பேருக்கு மருத்துவம் பார்த்தவருக்கு யாரும் நினைவு மருத்துவம் பார்க்க முடியாத நிலை. தன் அனுபவங்களின் வழியே இதை 48 வகையான காட்சிகளாகவும் கதையாகவும் பகிர்கிறார் சஞ்சயன். சுய அனுபவப் பதிவாக எழுதப்பட்டுள்ள இந்தக் கதைகளில் நம்முடைய பதட்டத்தைக் காண்கின்றோம். நெஞ்சை உருக்கும் வார்த்தைகளில் இதயத்தை உலுக்கும் ஒரு வாழ்க்கையை சஞ்சயன் எழுதியுள்ளார்.