தேவகி கருணாகரன். அவுஸ்திரேலியா: திருமதி தேவகி கருணாகரன், சிட்னி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2024.(சென்னை 600 040: Stilo Books, 55(7), R-Block, 6th Avenue, அண்ணா நகர்).
148 பக்கம், விலை: இந்திய ரூபா 180., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-93-94693-22-7.
இந்நூலில் யாழினி (குறுநாவல்), மாதவன் ஏமாந்தான், பிரியாவும் ஜேம்சும், சுவர்ணபூமி, உங்கள் வாழ்வு நீள, உயர்ந்த மலை, ஒரு முன்னோடி, இருளிலிருந்து வெளிச்சத்திற்கு ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட எட்டு படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. கதைகளின் களங்கள் இலங்கையிலும் அவுஸ்திரேலியாவிலும் நிலைகொள்கின்றன. எமது தமிழ்ச் சமூகம் பேசத் தயங்கும் விடயங்கள் இவரால் எளிதாக தன் கதைகளினூடாகப் பேசப்படுகின்றன. இவரது பெரும்பான்மையான கதைகள் பல்வேறு பண்பாட்டு விழுமியங்களையும் தொட்டுச் செல்கின்றன. ‘யாழினி’ குறுநாவல் முன்னிறுத்தும் பிரச்சினை மிக முக்கியமானது. விசாரணைக்காக இழுத்துச் செல்லப்படும் இளைஞனின் வாழ்வில் நிகழும் உறவுச் சிக்கல்கள், அதனால் ஏற்படும் உளவியல் ரீதியான தடுமாற்றங்கள் ஆகியவற்றை எப்படி கையாள்கிறார்கள் என்பதை ஆசிரியர் விபரித்துச் செல்கிறார். தாயகத்தை விட்டுப் புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு வந்தாலும், குடும்ப வன்முறையினால் வேறொரு நாட்டுக்குத் தப்பிச்செல்லும் சூழலை எதிர்நோக்கிய ஒரு பெண், இலங்கையில் போர்க்காலத்தில் காணாமல் போன கணவன் மீண்டும் வரமாட்டான் என்ற நம்பிக்கையில் மற்றும் ஒரு இல்லற பந்தத்திற்குள் நுழைந்து மீண்டும் நிர்க்கதியாகும் மற்றொரு பெண், பெற்றோராகவிருக்கும் இரண்டு ஆண்களின் மத்தியில் வளரும் குழந்தை என இவரது கதைகள் அனைத்துமே நனவிடை தோய்தல் உத்தியில் நகர்ந்து செல்கின்றன. திருமதி தேவகி கருணாகரன், இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சிட்னி மாநகரில் வசித்து வருகின்றார். 2023ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் புத்தக வெளியீட்டாளரான ஸீரோ டிகிரி பதிப்பகம், தாம் ஒழுங்குசெய்திருந்த குறுநாவல் போட்டியில், யாழினி-குறுநாவலுக்கு விருதும் பணப் பரிசும் வழங்கியிருந்தது.