மாத்தளை பெ.வடிவேலன். கொழும்பு 13: மு.நித்தியானந்தன், எச்.எச்.விக்கிரமசிங்க, 39/21, அல்விஸ் பிளேஸ், கொட்டாஞ்சேனை, 1வது பதிப்பு, டிசம்பர் 2022. (கொழும்பு 14: விக்ரம் பிரின்டர்ஸ், 40 F, சமகிபுர தொடர்மாடிக் குடியிருப்பு, செயின்ட் ஜோசெப் வீதி).
220 பக்கம், விலை: ரூபா 1000., அளவு: 21×13.5 சமீ., ISBN: 978-624-98019-3-6.
இலங்கை வாழ் இந்திய வம்சாவழி மலையக மக்களின் வாழ்கையின் அவலங்களை மிக யதார்த்தமாக சித்திரிக்கும் இலக்கியத் தொகுப்பாக இந்தச் சிறுகதை தொகுதி அமைந்துள்ளது. தாத்தாவின் ரெங்குப்பெட்டி, வதைப் படலம், அட்சய வடம், நாடு கடந்த நதிகள், உச்சி மீது வானிடிந்து, உரிமை வேண்டும், வல்லமை தாராயோ, தலைக்கொரு கூரை, பிஞ்சு உலகம், அக்னி, இராமு தீபாவளிக்கு தனது தோட்டத்துக்கு வருகிறான், தோழர் விக்கிரம யாழ்ப்பாணம் செல்கின்றார், தர்மத்தின் வாழ்வுதனை, குப்பி லாம்பு ஆகிய 14 கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. ‘தினபதி” என்ற இலங்கைத் தினசரி அறிமுகப்படுத்திய ‘தினமொரு சிறுகதை”த் திட்டத்தின் கீழ் திருச்செந்தூரனின் சிபார்சுடன் தனது ‘கண்கள் “ (1969) கதை மூலம் சிறுகதைத்துறைக்குள் நுழைந்த இவர் வெகு விரைவிலேயே மலையகச் சிறுகதை இலக்கிய வரலாற்றில் தனது இடத்தை உறுதிப்படுத்திக்கொண்டார். மலையகச் சிறுகதை இலக்கியத்தின் சில உச்சங்களை அவரது கதைகள் தொட்டிருக்கின்றன. சமூக அநீதிகள் கண்டு குமுறும் அவரது ஆவேசத்தை இந்நூலிலும் அவரின் எல்லாக் கதைகளிலுமே காணமுடிகிறது. மலையகத்தில் தொடர்ந்து நடைபெற்ற சிங்களக் காடையர்களின் இனவெறியாட்டத்தில் தோட்டத் தொழிலாளர்கள் துயருறுவதைக் காணச்சகியாத நெஞ்சக் குமுறல்களாகவே (ஓரிரு கதைகளைத் தவிர) பெரும்பாலான கதைகளும் அமைந்துள்ளன. மாத்தளை வடிவேலனின் இச்சிறுகதைத் தொகுப்பில் தாத்தாவின் ரெங்கு பெட்டி, அட்சய வடம், அக்கினி, உச்சிமீது வானிடிந்து, இராமு தீபாவளிக்கு தனது தோட்டத்திற்கு வருகின்றான், வல்லமை தாராயோ?, தர்மத்தின் வாழ்வுதனை ஆகிய கதைகள் மலையகத்தின் இனவன்மைக் குரூரங்களைச் சித்திரிக்கின்றன. இந்த வன்முறைகள் நிகழ்ந்தபோதெல்லாம் வடிவேலன் அந்த மக்கள் கூட்டத்தில் ஒருவனாக அந்த மக்களோடு நின்றிருக்கிறார். ‘தாய்’ சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும் டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவர் முனைவர் டாக்டர் குமார் ராஜேந்திரன் இலக்கிய விருதாக மாத்தளை வடிவேலனின் இச் சிறுகதை தொகுப்பிற்கு இலங்கை ரூபாய் மதிப்பில் ஒரு இலட்சம் ரூபாய் வழங்கி கௌரவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.