தொ.பத்தினாதன். நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2022. (சென்னை 600018: கிளிக்டோ பிரின்ட், ஜலீல் டவர், 42, K.B.தாசன் வீதி, தேனாம்பேட்டை).
208 பக்கம், விலை: இந்திய ரூபா 250., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-960589-2-0.
இந்நாவலை அதன் சாரம் சார்ந்து ‘அலைவுறுதல்’ என்ற ஒற்றைப் புள்ளியில் குவிமையப்படுத்தலாம். இந்த அலைவுறுதல், இலங்கையிவிலிருந்து தமிழ்நாட்டுக்கான பொருண்மையான அலைவுறுதலாகவும், அகதிகள் முகாமுக்குள் அன்றாட வாழ்க்கைப் பாட்டிற்கு நடக்கும் பொருள்சார்ந்த அலைவுறுதலாகவும் மாறுபட்ட தோற்றம் கொண்டு நாவலில் விரிகின்றது. அலைதலின் வேதனை, அடைக்கலம் தருபவர்கள் கையளிக்கும் அவமானத்தின் வலி, இரண்டு வேளைச் சோற்றுக்கு வந்த பஞ்சம், இவ்வளவுக்கும் இடையிலும் விலக மறுக்கும் காமத்தின் வெம்மை என இந்த நாவலின் பாத்திரங்கள் அனுபவிக்கும் துயரங்கள் பன்முகத்தன்மை கொண்டவை. அகதிகளின் துயரங்களைச் சொல்லும் பத்தினாதன் அவர்களுடைய வஞ்சகத்தனங்களையும் சொல்ல மறுப்பதில்லை. நாவலில் வரும் ஆணும் பெண்ணும் புறவுலக இருப்பிடங்களுக்கு மட்டுமின்றிச் சொந்த வாழ்க்கையில் கண்டடைய வேண்டிய இடத்திற்காகவும் அலைவுறுகின்றார்கள். இந்த அலைதலைச் சொல்லும் நாவலாசிரியர் பெண்ணும் ஆணும் ஒருவரை ஒருவர் சுரண்டி ஏமாற்றி வாழும் யதார்த்தத்தையும் அம்பலப் படுத்துகின்றார். தமிழகத்தில் இயங்கும் இலங்கைத் தமிழ் அகதி முகாம் குறித்த அழுத்தமான சித்திரத்தை இந்நாவல் தருகின்றது. தொ.பத்தினாதன் 1974இல் மன்னார் மாவட்டத்தில் வட்டக்கண்டல் என்ற ஊரில் பிறந்தவர். 1990இல் யாழ்ப்பாணத்தில் படித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட இரண்டாம் கட்டப் போர் காரணமாகத் தனது 16ஆவது வயதில் அகதியாகத் தமிழகம் சென்றார். சுமார் 8 ஆண்டுகள் மதுரை மாவட்டம் உச்சப்பட்டி அகதிகள் முகாமில் வாழ்ந்தவர். பின்னர் சென்னைக்குச் சென்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பொது நிர்வாகம் படித்தார். தமிழகம் வாழ் இலங்கை அகதிகளின் வாழ்வியல் குறித்துத் தொடர்ந்து எழுதி வருபவரான இவர் தற்போது இலங்கை திரும்பியுள்ளார். இவர் போரின் மறுபக்கம் (2010), தமிழகத்தின் ஈழ அகதிகள் (2014), தகிப்பின் வாழ்வு (2019) ஆகிய நூல்களை முன்னதாக எழுதியுள்ளார்.