பா.அ.ஜயகரன். நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2023. (சென்னை 600077: மணி ஓப்செட்).
216 பக்கம், விலை: இந்திய ரூபா 270., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-19034-97-0.
இலங்கையிலிருந்து அரசியல் காரணங்களால் 1986இல் கனடாவுக்குப் புலம்பெயர்ந்து தற்போது டொரண்டோ நகரில் வாழ்ந்துவரும் பா.அ. ஜயகரனின் மூன்றாவது கதைத் தொகுதி இது. அரசுகளாலும் அமைப்புகளாலும் கைவிடப்பட்ட, துண்டாடப்பட்ட, தூக்கி எறியப்பட்ட உலக மனிதர்களின் கதைகள் இவை. இந்தக் கதைகளின் பாத்திரங்களை ஆசிரியர் இரத்தமும் சதையுமாக ஆழமான இணக்கத்தோடு வரைந்து காட்டுகிறார். இலட்சியத்துக்காகப் பலிக்கடாவாக்கப்பட்ட சாட்சிகளை இக்கதைகளில் வாசிக்கலாம். அந்தச் சாட்சிகள் தரும் குற்றவுணர்வு அரசுகள், அமைப்புகள் மேலான விமர்சனமாக விரிவதை இத்தொகுப்பின் சாரமாகக் கொள்ளலாம். காட்சிகளையும் மனித மனங்களையும் துல்லியமான நறுக்குத் தெறித்தாற்போன்ற விவரணங்களோடு எழுதிக் காட்டும் ஆசிரியர், மனிதர்களின் இதத்தையும் இக்கதைகளில் துலக்கிக் காட்டுகிறார். புலம்பெயர்ந்த சூழலில் சமகாலக் கதைகளை எழுதிவரும் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராக பா.அ. ஜயகரனை இத்தொகுதி அடையாளம் காட்டுகின்றது. இத்தொகுதியில் செல்வி மிசால் யூலியே அம்றோஸ், வந்திறங்கிய கதை, ஜெனி-போரின் சாட்சியம், சந்தி: ஒரு கதை சொல்லியின் கதை, நனாபுஸ், சவம் எழுந்த கதை, அவனைக் கண்டீர்களா?, நீங்கள் எந்தப் பக்கம் போகிறீர்கள், புத்தன் தொலைந்த வெளி, இல்லாத கால்களின் வலி ஆகிய 10 கதைகள் இடம்பெற்றுள்ளன.