17727 அறிவற்றம் காக்கும் கருவி.

ஆ.மு.சி.வேலழகன் (இயற்பெயர்: ஆதிமுத்து சின்னத்தம்பி வேல்முருகு). மட்டக்களப்பு: இளவரசி உதயசூரியன் பதிப்பகம், வள்ளுவன் மேடு, மாவேற்குடாப் பிரிவு-1, திருப்பழுகாமம், பெரியபோரதீவு, 1வது பதிப்பு, வைகாசி 2020. (மட்டக்களப்பு: அட்சயன் அச்சகம், பிரதான வீதி, கொக்கட்டிச்சோலை).

128 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-7300-12-2.

ஆ.மு.சி.வேலழகன் இந்நாவலை மார்க்சியச் சிந்தனைகளைப் பரப்புரை செய்கின்ற ஒரு படைப்பாகவே வடிவமைத்திருக்கிறார். அதிலும் தமிழ்-சிங்கள இன உறவை அழுத்துவதாகவும் அதனூடாக மார்க்சியச் சிந்தனைகளை வெளிப்படையாகவே பரப்புரை செய்வதாகவும் இந்நாவல் அமைந்திருக்கிறது. இதனோடு ஒட்டியதாக மனிதாபிமானச் சிந்தனைகளையும் மனித உறவுகளுக்கிடையேயான பிணைப்பினையும் ஆசிரியர் அழுத்திச் சொல்கின்றார். மட்டக்களப்பைச் சேர்ந்த இளைஞன் திருநாவுக்கரசுவுக்கு கொழும்பிலே ஏற்பட்ட இக்கட்டான நிலையொன்றில் உதவி செய்கின்ற மார்க்சியச் சிந்தனாவாதியான ஆரியதாசவின் மனிதாபிமானச் செயலில் இருந்து தமிழ் சிங்கள உறவையும் அதனோடு சேர்ந்ததாக மார்க்சியக் கருத்துப் பரப்புரைகளையும் பல்வேறு கட்டங்களுக்கூடாக இறுதிவரை ஆசிரியர் நகர்த்திச் செல்கின்றார். திருநாவுக்கரசு-ஆரியதாச ஆகியோரின் கூற்றுக்கள், கடிதங்களுக்கூடாக மார்க்சியக் கருத்துகள் பேசப்படுகின்றன. இந்நாவலில் ஆரியதாசா என்ற சிங்கள இளைஞனின் பாத்திரம், மார்க்சியம், இன நல்லுறவு என்பவற்றை அழுத்துவதற்கான முதன்மைப் பாத்திரமாகப் படைக்கப்பட்டிருக்கின்றது. சிங்கள இளைஞன் ஒருவனுக்கும் தமிழ் இளைஞன் ஒருவனுக்கும் இடையிலான உறவு பின்னர் இருவரது குடும்பங்களுக்கு இடையிலான உறவுப் பிணைப்பாகப் பரிணமிக்கின்றது. இறுதியில் இரு குடும்பங்களுக்கும் இடையிலான திருமண பந்தத்தினையும் கொண்டுவந்து இந்த உறவு அழுத்தப்படுகின்றது. திருநாவுக்கரசுவின் குடும்பத்தையும் ஆரியதாசவின் குடும்பத்தையும் முறையே தமிழ்-சிங்கள இனங்களின் குறியீடாகவே ஆசிரியர் அமைத்திருக்கின்றார். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 94914).

ஏனைய பதிவுகள்