வாசு முருகவேல்.தமிழ்நாடு: எதிர் வெளியீடு, 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி 642 002, 1வது பதிப்பு, ஜனவரி 2025. (சென்னை 600005: ஜோதி என்டர்பிரைசஸ்).
72 பக்கம், விலை: இந்திய ரூபா 130., அளவு: 18.5×13 சமீ., ISBN: 978-93-48598-09-7.
2009ஆம் ஆண்டு ஈழப் போரின்போது ஈழத்தின் அதிகாரபூர்வமான தலைநகராக இயங்கிவந்த கிளிநொச்சி நகரைக் கைவிட வேண்டிய நெருக்கடியான சூழல் போராளிகளுக்கு ஏற்பட்டது. இலங்கை அரசின் படைகள் அங்கு நுழைந்தபோது கிளிநொச்சி வெறிச்சோடிக் கிடந்தது. போராளிகள், பொதுமக்கள் அனைவரும் தங்களால் கொண்டுபோகக் கூடிய அனைத்து உடைமைகளையும் எடுத்துக்கொண்டு அந்நகரை விட்டு ஏற்கெனவே முற்றிலும் வெளியேறியிருந்தனர். பாரிய யுத்தத்தை எதிர்கொள்ளப் போகும் நகராக எதிர்பார்க்கப்பட்ட கிளிநொச்சி போராளிகள்-இராணுவத்தினர்-மக்கள் என அனைவருக்கும் ஏமாற்றத்தையே தந்திருந்தது. யாருமற்ற அந்தச் சூனியமான ஓரிரவில் தனிமைப்பட்டு நின்ற ‘அன்னா’ என்ற பெண்ணின் இரத்தமும் சதையுமான நினைவுகளும் பிறழ்வுகளுமே இந்நாவலின் மையமாகும். போரில் இவையெல்லாம் சாத்தியமா என்ற கேள்வியை போரில் வென்றவர்களும், தோற்றவர்களும் எழுப்புவதில்லை. அசாத்தியங்களால் நிரம்பியது தான் போர். இந்தக் குறுநாவலின் மையமாக அன்னா என்ற பெண்ணே இருக்கின்றாள். மனித வாழ்க்கையில் மட்டுமல்ல போராட்டங்களிலும் பெண்கள் தான் மையமாக இருந்திருக்கிறார்கள். அதனால் பேரிழப்புகளையும் அவமானங்களையும் சந்திப்பதும் பெண்கள் தான் என்பது மறுக்கமுடியாத கசப்பான உண்மை. நூலாசிரியர் நயினாதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது புலம் பெயர்ந்து தமிழகத்தில் வாழ்ந்து வருகிறார். ‘ஜெப்னா பேக்கரி’, ‘கலாதீபம் லொட்ஜ்’, ‘புத்திரன்’, ‘மூத்த அகதி’, ‘ஆக்காண்டி’ ஆகிய நாவல்களை ஏற்கெனவே இவர் எழுதியுள்ளார். இவரது ‘ஜெப்னா பேக்கரி’ நாவல் இன அழிப்பிற்கு எதிரான இஸ்லாமிய இளைஞர் இயக்கத்தின் முதல் நெருப்பு விருதையும், ‘மூத்த அகதி’ நாவல் ஸீரோ டிகிரி மற்றும் தமிழரசி அறக்கட்டளை நாவல் போட்டியில் இரண்டாவது பரிசையும் பெற்றது.