மு.தயாளன் (இயற்பெயர்: மு.நற்குணதயாளன்;). மட்டக்களப்பு: மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2021. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496யு, திருமலை வீதி).
iv, 190 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5849-06-2.
இது வெறும் சமூக நாவல் அல்ல. ஓர் இனத்தின் விடுதலை வேட்கை இங்கே புதிய பரிமாணம் கொள்கின்றது. ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் நிகழும் சம்பவங்களே ‘இதிகா’ நாவல் எங்கும் விரவிக் கிடக்கின்றன. ஆசிரியர் அக்காலகட்டத்தில் வாழ்ந்த இளைஞர்களின் மன நிலையை தெளிவாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார். ஈழ விடுதலைப்போராட்டத்தில் விடப்பட்ட தவறுகள் அன்றே எதிர்வுகூரப்பட்டிருந்தமையை நாவலின் கதாபாத்திரங்களினூடாக பதிவுசெய்துள்ள ஆசிரியர், அன்று விடப்பட்ட தவறுகளே இன்று ஈழத்தமிழ் இனத்தின் கேள்விக்குரியதாகிப் போய்விட்ட இன்றைய அவலநிலைக்குக் காரணமாகிவிட்டதை நாசூக்காகப் புரியவைக்கிறார். தமிழ்-சிங்கள கலப்புத் திருமணங்கள் இனப்பிரச்சினைக்கு நல்ல தீர்வாகும் என்று இன்றும் கூறிவரும் அரசியல்வாதிகளுக்கு, இந்த நம்பிக்கை அன்றே தோல்விகண்டுவிட்டதை இந்நாவல் புரியவைக்க முயல்கின்றது. இதிகா, சுவந்திகா, சாந்தா போன்ற பெண்கள் அக்காலகட்டத்தை எவ்வாறு தைரியமாக எதிர்கொண்டார்கள் என்பதை இந்நாவல் சுவைபடக் கூறுகின்றது. அக்காலத்தில் இலங்கையில் பத்திரிகைச் சுதந்திரம் பட்ட பாடுகளும், இடதுசாரி அமைப்புக்களின் கள்ள மௌனங்களும், விடுதலை இயக்கங்கள் தவறான கண்ணோட்டத்துடன் அக்காலத்தில் வாழ்ந்த இடதுசாரிக் கருத்தாளர்களை அழித்து சமூக நீக்கம் செய்த வரலாறும் இந்த நாவலில் ஆங்காங்கே பதிவாகின்றன. இது மகுடம் பதிப்பகத்தின் 48ஆவது நூலாக வெளிவந்துள்ளது.