தமிழ்க்கவி. (இயற்பெயர்: திருமதி தமயந்தி சிவசுந்தரலிங்கம்). சென்னை 14: மேன்மை வெளியீடு, 5/2, பெர்தோ தெரு, இராயப்பேட்டை, வி.எம்.தெரு, 1வது பதிப்பு, 2017. (சென்னை 14: கப்பிட்டல் இம்பிரெஷன்).
212 பக்கம், விலை: இந்திய ரூபா 200., அளவு: 21.5×14.5 சமீ.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின்போது அலைக்கழிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் சிக்கல் நிறைந்த அன்றாட வாழ்க்கையை தனக்கேயுரிய எழுத்துத்திறனால் உணர்வுபூர்வமாக தமிழ்க்கவி பதிவுசெய்துள்ளார். தமிழீழ விடுதலைப் போராட்ட நிகழ்வுகளின் ஊடாக ஒரு பாட்டிக்கும் பேத்திக்குமான உறவை, படிப்பவர் எளிதில் உள்வாங்கும் வகையில்; கதை நகர்த்திச் செல்லப்படுகின்றது. தான் முன்னாள் போராளியாக இருந்தபோதிலும் தனது பேத்தி ஒரு போராளியாக மாறிவிடாமல் சராசரி குடும்பப் பெண்ணாக, கல்வி, நல்ல திருமணம், அதற்கான பணச் சேகரிப்பு என அவளுக்காவே வாழ்ந்துவரும்; பார்வதிப் பாட்டியும், பாட்டிமீது அளப்பரிய அன்பிருந்தும், காதலில் நனைந்தபின் பாட்டியின் அக்கறையை உபத்திரவம் எனத் தவறாக நினைக்கும் பேத்தி மீனாவும் இந்நூலின் முதன்மைப்பாத்திரங்கள். காதலன் மீதான ஏமாற்றம், பாட்டியின் இறுக்கமான அக்கறை, என்பன மீனாவை இறுதியில் தன் குடும்பத்தை உதறித் தள்ளிவிட்டு விடுதலைப் போராட்ட அமைப்பை நாடிச் செல்ல வைக்கின்றது. வவுனியா சின்னப் புதுக்குளத்தைச் சேர்ந்த தமிழ்க்கவி, தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் சுமார் 18 ஆண்டுகள் கலை – பண்பாட்டு துறையில் பணியாற்றியவர். வீதி மற்றும் மேடை நாடகங்கள், வானொலி – தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பேச்சு, கவிதை, தொடர் என்று பல களங்களில் இயங்கியவர். இவர் மகப்பேற்று மருத்துவிச்சியாகவும் பல காலம் பணியாற்றினார். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 82760).