ஸ்ரீபிரசாந்தன்(தொகுப்பாசிரியர்). கொழும்பு: உயர்கல்வி அமைச்சு, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
118 பக்கம், விலை: ரூபா 220., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-431-7.
உயர்கல்வி மாணவர்களின் திறன் ஊக்குவிப்புக் கருதி உயர்கல்வி அமைச்சு நடாத்திய ‘ஆற்றல்’ நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் நடத்திய தமிழ்மொழி மூல நாவல் போட்டிகளில் பரிசுபெற்ற மூன்று குறுநாவல்களின் தொகுப்பு இது. ஆசிரியர் பெயரோ பல்கலைக்கழக விபரமோ நூலில் குறிப்பிடப்படாத- ஆனால் முதலாம் பரிசுபெற்ற ‘என் தலையெழுத்து என்ன?’, சபரகமுவா பல்கலைக்கழக, விவசாய பீடத்தில் மூன்றாம் வருடப் பட்டக்கல்வியை மேற்கொள்ளும் செல்வி ரூபிகா கிருபானந்தன் எழுதி இரண்டாவது இடத்தைப் பெற்ற ‘குறிஞ்சி முதல்’, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் வியாபார முகாமைத்துவம் பயிலும் ஏ.எம்.அஷ்ரஃப் எழுதி மூன்றாம் இடம் பெற்ற ‘நம்பிக்கை’ ஆகிய மூன்று குறுநாவல்களை உள்ளடக்கிய நூல். இந்நூலின் தொகுப்பாசிரியர் தனது குறிப்புரையில் ‘எமது படைப்பும் பிரசுரமாகின்றது என்னும் உயரிய மகிழ்ச்சியை இத்தொகுப்பு இப்படைப்பாளரிடம் விதைக்கின்றது. இதைத் தொடக்கமாகக்கொண்டு மென்மேலும் செழுமைப்பட்டு அவர்கள் சிறக்கவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் முதல் மூன்று பரிசுகளை வென்ற குறுநாவல்களைத் தொகுத்த வேளை முதல் பரிசுபெற்ற இளம் படைப்பாளியின் பெயரையோ அவரது கல்விப் பின்புலத்தையோ நூல்பிரதியில் காணமுடியவில்லை என்பது கவலைக்குரியதாகும். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 115380).