தாட்சாயணி (இயற்பெயர்: பிரேமினி பொன்னம்பலம்;). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
200 பக்கம், விலை: ரூபா 800.00, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-624-6601-53-9.
குடும்பப் பெண்ணான பூரணி பல்கலைக்கழகத்தில் தான் சந்தித்த சக மாணவன் மதியுகன் மீது பல்கலைக்கழக நாட்களில் கொண்டிருந்த ஆகர்ஷிப்பினை அதன் அந்தரங்க நினைவுகளை மீட்டுவதாக புனையப்பட்ட நாவல் இது. பூரணியின் அந்தரங்கம் அவளது நினைவுகளுக்கு அப்பால் இம்மியளவும் நகராதவாறு மிக்க அவதானத்துடனும் அதீத கூர்மையுடனும் தாட்சாயணி இந்நாவலைச் சித்திரித்துள்ளார். தனது பல்கலைக்கழக வாழ்வியலைப் பின்புலமாகக் கொண்டு வெகு அற்புதமாக உதிர் கனாவை உயிரோட்டம் மிக்கதாக உருவாக்கியுள்ளார். 1990களில் ஈழத்து இலக்கிய வெளியில் முகிழ்ந்த எழுத்தாளர் தாட்சாயணி, சிறுகதை, சிறுவர் இலக்கியம், கவிதை, ஆன்மீகக் கட்டுரைகள், இலக்கியத் திறனாய்வு எனப் பன்முக ஆளுமை கொண்டவர். பல அரச விருதுகளை தன் படைப்புகளுக்காகப் பெற்றிருக்கும் தாட்சாயணியின் முதலாவது நாவல் இதுவாகும். தாட்சாயணி யாழ்ப்பாண மாவட்டத்தின் சாவகச்சேரியில் சபாரத்தினம் – யோகாம்பிகை இணையருக்கு மே 7, 1975 அன்று பிறந்தார். தாட்சாயணியின் இயற்பெயர் பிரேமினி. தனது ஆரம்பக் கல்வியை சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் ஆரம்பப் பிரிவிலும் உயர் கல்வியை யாழ். இந்து மகளிர் கல்லூரி, சாவகச்சேரி இந்துக் கல்லூரி ஆகியவற்றிலும் நிறைவு செய்தார். பின்னர், விஞ்ஞானமாணி பட்டப்படிப்பினை (இளங்கலை அறிவியல்) யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்திலும் பிராந்தியத் திட்டமிடல் துறைக்கான முதுமாணிப் படிப்பினை (முதுகலை) யாழ். பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப் படிப்புக்கள் பீடத்திலும் பூர்த்திசெய்தார். இவர் 2003-ல் பொது முகாமைத்துவ உதவியாளராக அரசாங்கப் பணியில் நுழைந்து, 2005-ல் ஆசிரியராகி, 2006-ல் இலங்கை நிர்வாக சேவையில் இணைந்து, தற்போது பிரதேச செயலாளராகக் கடமையாற்றுகிறார். தாட்சாயணியின் கணவர் பெயர் இரட்ணசபாபதி பொன்னம்பலம். இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 426ஆவது நூலாக வெளிவந்துள்ளது.